மும்பை :
மும்பை கோரகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடிசை சீரமைப்பு பணி ஒப்பந்தம் மராட்டிய ஒழுங்குமுறை ஆணையமான ‘மகாடா’வால் சில ஆண்டுகளுக்கு முன் குரு ஆஷிஸ் என்ற கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதில் அந்த நிறுவனம் குடிசைப்பகுதி மக்களுக்கு வீடுகள் கட்ட வேண்டிய ரூ.1,034 கோடி நிலத்தை விற்று மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையில் புகார் கூறப்பட்டது.
இந்த மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் ராவத்துக்கு நெருக்கமானவரான தொழில் அதிபர் பிரவின் ராவத் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல பி.எம்.சி. வங்கி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை பிரவின் ராவத்தின் மனைவி மாதுரியுடன் உள்ள தொடர்பு குறித்து சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்திடம் விசாரணை நடத்தி இருந்தனர்.
இந்தநிலையில் அமலாக்கத்துறையினர் பத்ரா சால் முறைகேடு வழக்கு தொடர்பாக சஞ்சய் ராவத்திற்கு சொந்தமாக அலிபாக்கில் உள்ள 8 நிலங்கள் மற்றும் தாதரில் உள்ள ஒரு வீட்டை முடக்கி உள்ளனர்.
இதுகுறித்து அமலாக்கத்துறை டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- பத்ரா சால் சீரமைப்பு திட்ட வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை ரூ.11 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை கையகப்படுத்தி உள்ளது. பால்கரில் பிரவின் ராவத்திற்கு சொந்தமான நிலம், தாதரில் வர்ஷா ராவத்திற்கு சொந்தமான வீடு, அலிபாக்கில் உள்ள வர்ஷா ராவத், ஸ்ப்னா பத்கருக்கு சொந்தமான நிலங்கள் ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையின் நடவடிக்கை குறித்து சஞ்சய் ராவத் கூறுகையில், “நான் இதற்கெல்லாம் பயப்படுகிறவன் அல்ல. எனது சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள், சுடுங்கள் அல்லது ஜெயிலில் போடுங்கள். சஞ்சய் ராவத் பால்தாக்கரேவின் தொண்டன். சிவசேனாக்காரன். அவன் போராடுவான். எல்லோரையும் அம்பலப்படுத்துவான். நான் அமைதியாக இருப்பவன் அல்ல. அவர்கள் ஆடட்டும். உண்மை வெளியே வரும்” என்றார்.
இதேபோல சஞ்சய் ராவத் டுவிட்டரில், ” வாய்மையே வெல்லும்” என பதிவிட்டு இருந்தார். முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக், மந்திரி நவாப் மாலிக்கை தொடர்ந்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மீதும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து இருப்பது மராட்டிய அரசியலில் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.