இலங்கை நாடாளுமன்ற வாயில் வரை வந்த ஆயுதம் ஏந்திய பைக்கர்கள்: விசாரணைக்கு உத்தரவு

கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற வாயில் வரை வந்த ஆயுதம் ஏந்திய பைக்கர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஆளும் கட்சியின் 12 அதிருப்தி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தனித்து செயல்பட முடிவு செய்ததால் அரசு பெரும்பான்மை ஆதரவை இழந்துள்ளது. இதனால், இலங்கையில் ஏப்ரல் 1ம் தேதி நடைமுறைக்கு வந்த அவசர நிலை பிரகடனத்தை ரத்து செய்துள்ளார் அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே.
இந்நிலையில், நேற்று மாலை இலங்கை நாடாளுமன்ற வளாகத்தின் முன் மக்கள் திரண்டு போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது, 2 பைக்குகளில், அதுவும் வாகனப் பதிவு எண் இல்லாத பைக்குகளில் முகமூடி அணிந்து துப்பாக்கி ஏந்தியபடி 4 பேர் வந்தனர்.

அவர்களை நாடாளுமன்ற வாயிலை நோக்கி வருவதைப் பார்த்த மக்களும், போலீஸாரும் அதிர்ந்து போயினர். பதிவு எண் இல்லாத வாகனத்தில் வந்ததால் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். ஆனால் சரியான பதில் அளிக்காமலேயே அவர்கள் திரும்பிச் சென்றனர்.
இது குறித்து ஓய்வு பெற்ற பாதுகாப்புச் செயலர் ஜெனரல் கமல் குணரத்னே, காவல்துறை ஐஜியிடம் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால், அந்த 4 பேரும், ராணுவத் தலைமையக உத்தரவின்படியே நாடாளுமன்ற வளாகப் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டதாக ராணுவ ஜெனரல் சவேந்திரா சில்வா கூறியுள்ளார். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை நடத்துமாறு போலீஸ் ஐ.ஜி விக்ரமரத்னேவுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனை ஏற்றுக்கொண்ட ஐஜி விக்ரமரத்னே விசாரணைக்கு உத்தரவிட்டதோடு சம்பந்தப்பட்ட போலீஸார் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் ப்ரிகேடியர் நிலந்தா பிரேமரத்னே தெரிவித்துள்ளார்.

ஆனால், போலீஸார் தரப்பிலோ வந்தவர்கள் முன் அறிவிப்பு ஏதுமின்றி வந்தனர். பைக்கிலும் பதிவு எண் இல்லை. முகமூடி அணிந்து கையில் ஆயுதம் வைத்திருந்தனர். சந்தேகத்தின் பேரிலேயே அவர்களைத் தடுத்தோம் எனத் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.