சென்னை: ஆவின் பெட்ரோல் பங்க் மூலம்தினமும் 11 ஆயிரம் லிட்டர் எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பால்வளத் துறையின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம்,தமிழகம் முழுவதும் தினமும் 41 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்கிறது. ஏறத்தாழ 28.44 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுவதுடன், மீதமுள்ள பாலை பல்வேறு பால் பொருட்கள் செய்யப் பயன்படுத்துகிறது.
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பாலை சரியான நேரத்துக்குவிற்பனை நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல பால் டேங்கர் மற்றும் பாக்கெட் ஒப்பந்த வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப தனியார் பெட்ரோல் பங்க்-களுக்குச் செல்ல வேண்டியுள்ளதால், கூடுதல் செலவு ஏற்பட்டது.
இந்த செலவைக் குறைக்கும் வகையில், அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை வளாகத்தில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பாக பெட்ரோல், டீசல் மற்றும் ஆயில் சில்லறை விற்பனை நிலையம் கடந்த டிச.22-ம் தேதி திறக்கப்பட்டது. இதை ஆவின் நிறுவனம் பராமரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த பெட்ரோல் பங்க்-ல் ஆவின் வாகனங்களுக்கு நாளொன்றுக்கு 4 ஆயிரம் லிட்டர் டீசலும், பொதுமக்களுக்கு 2 ஆயிரம் லிட்டர் டீசலும், 5 ஆயிரம் லிட்டர் பெட்ரோலும் விற்பனை செய்யப்படுவதாகவும், இதன் மூலம் மாதம் ரூ.2 லட்சம் வரை வருவாய் கிடைப்பதாகவும் ஆவின் நிர்வாக இயக்குநர் ந.சுப்பையன் தெரிவித்துள்ளார்.