டக்கார்:மாலி ராணுவத்தினர், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை என கூறி ரஷ்ய படைகள் உதவியுடன் கடந்த மாத இறுதியில் ஒரே நேரத்தில் 300க்கும் மேற்பட்டோரை சுட்டுக்கொன்றதாக மனித உரிமை அமைப்பினர் கூறி உள்ளனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியின் மத்திய பகுதியில் உள்ள மொராவில் அல் – குவைதா பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருவதாக அந்நாட்டு அரசு கூறி வருகிறது. பயங்கரவாதிகளுக்கு எதிராக மாலி ராணுவத்தினர் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு உதவிய ரஷ்ய படையினர் கடந்த மாத இறுதியில் 300க்கும் மேற்பட்டோரை சுட்டுக்கொன்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக ஆப்ரிக்காவின் சஹேலை சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்பக இயக்குனர் கொரின் டுப்கா நேற்று கூறியதாவது:மாலியின் மொராவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அல் – குவைதா பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தொடர்கிறது.
கடந்த மாத இறுதியில் ஒரே நேரத்தில் 300க்கும் மேற்பட்டோர் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். இதை உறுதி செய்யும் வகையில் ‘கடந்த மாத இறுதியில் 203 பயங்கரவாதிகள் கொல்லப் பட்டனர்’ என அந்நாட்டு ராணுவம் கூறி உள்ளது.ஆனால் கொல்லப்பட்டவர்களில் சிலர் மட்டுமே பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோர். மற்றவர்கள் பொதுமக்கள் என எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இப்படுகொலையை மாலி ராணுவத்துடன் இணைந்து ரஷ்ய படையினர் மேற்கொண்டு உள்ளனர். ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கை நியாயமானது.ஆனால் பயங்கரவாதிகள் என கூறி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, இந்த படுகொலை மற்றும் அதில் வெளிநாட்டு ராணுவத்தின் பங்கு குறித்த விசாரணைக்கு மாலி அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement