மணிலா : பிரமோஸ் ஏவுகணை சோதனையின் போது, கோளாறு ஏற்பட்டு பாகிஸ்தானுக்குள் விழுந்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு அதனை இந்தியாவிடம் வாங்க ஒப்பந்தம் செய்துள்ள பிலிப்பைன்ஸ் வலியுறுத்தி உள்ளது. இந்தியா பரிசோதித்த ஏவுகணை ஒன்று தங்கள் எல்லை கிராமத்தில் விழுந்ததாக கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இதற்கு பதில் அளித்த இந்தியா, தவறுதலாக ஏவுகணை ஏவப்பட்டு இருப்பதாக கூறியது. ஆனால் அது எந்த வகை ஏவுகணை என்று இந்தியா குறிப்பிடவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் எல்லையை தாக்கிய ஏவுகணை இந்திய- ரஷ்யா கூட்டுத் தயாரிப்பான பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை என்பது தெரியவந்தது. கடந்த ஜனவரி மாதம் பிரமோஸ் வகை ஏவுகணைகளை வாங்க இந்திய அரசும் பிலிப்பைன்ஸ் அரசும் ஒப்பந்தம் மேற்கொண்டன. இந்த நிலையில் பாகிஸ்தான் மீது இந்தியா தவறுதலாக ஏவுகணையை ஏவிவிட்டதாக வெளியான செய்தி குறித்து இந்தியாவிடம் பிலிப்பைன்ஸ் விளக்கம் கேட்டுள்ளது. இந்தியாவிற்கான பிலிப்பைன்ஸ் தூதர் சாம்பு எஸ் குமரனை நேரில் அழைத்த பாதுகாப்பு துறை செயலர் மற்றும் மூத்த பிலிப்பைன்ஸ் அமைச்சர் ஆகியோர் பிரமோஸ் ஏவுகணை சோதனையின் போது, நேரிட்ட கோளாறு குறித்து விளக்கம் தருமாறு கோரினர். சோதனையின் போது, நடைபெற்ற நிகழ்வுகளின் விவரங்களை விரிவாக தருமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அப்போது ஏவுகணை சோதனை கோளாறு குறித்து விசாரணை நடைபெற்று வருவதை சுட்டிக் காட்டியுள்ள எஸ் குமரன், உரிய விவரங்கள் கிடைத்த உடன் அதனை பிலிப்பைன்ஸ் அரசுக்கு வழங்குவதாக பதில் அளித்துள்ளார்.