கோடைக்காலத்தில் அதிகம் விற்பனையாகும் என்ற எதிர்பார்ப்பில் திருக்கடையூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளரிச் சாகுபடி செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருக்கடையூர், சிங்கனோடை, காழியப்பநல்லூர், பத்துகட்டு, மாணிக்கபங்கு போன்ற கிராமங்களில் வெள்ளரிச் சாகுபடிக்கேற்ற நிலங்கள் நிறைய உள்ளன.
இந்தாண்டு பருவமழை நன்றாகப் பெய்ததால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் குளம், குட்டை, வாய்க்கால்களில் நீர் இருப்பில் உள்ளது. இவற்றிலிருந்து மின்மோட்டார் மற்றும் டீசல் என்ஜின் மூலம் நீர் பாய்ச்சி சுமார் 20 ஏக்கருக்கு மேல் வெள்ளரிச் சாகுபடி செய்துள்ளனர். உண்பதற்கு ஏற்ற இளம் வெள்ளரி பிஞ்சுகளை அறுவடை செய்து வருகின்றனர்.
இதுபற்றி சிங்கனோடை விவசாயி ராதாகிருஷ்ணனிடம் பேசியபோது, “நாங்க வருஷா வருஷம் வெள்ளரிப்பிஞ்சு பயிரிட்டு வர்றோம். வெள்ளரியை நடவு செய்த 40 நாட்களுக்கு பிறகு அறுவடைக்குத் தயாராகும். தற்போது நடவு செஞ்சு 40 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் அறுவடை செய்துட்டு வர்றோம். வெள்ளரிப் பிஞ்சுகளை உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து வியாபாரிகள் வந்து வாங்கிட்டுப் போறாங்க. வெள்ளரிப்பிஞ்சு உடல் சூட்டை தணிக்கிறதுக்கும், நாவறட்சியை போக்குறதுக்கும் உதவும்.
வழக்கத்தைவிட அதிகமா பயிர் செஞ்சிருக்கோம். 1 பிஞ்சு 3 ரூபாயிலிருந்து 5 ரூபாய் வரையிலும் பிஞ்சுகளுக்கு தகுந்தமாதிரி விலை கிடைக்குது. மக்களுக்கு 1 பிஞ்சு 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுது. இந்தாண்டு சற்று கூடுதல் விலை கிடைச்சிட்டு இருக்கு. இதே விலை நீடிச்சா ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்” என்றார்.