கிழக்கு மற்றும் தெற்கு டெல்லியில்
நவராத்திரி
திருவிழா சமயத்தில் இறைச்சிக்கடைகளை மூட வேண்டும் என்று அந்த மாநகராட்சிகளின் பாஜக மேயர்கள் கூறியிருப்பது பெருத்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
டெல்லியில் உள்ள 3 மாநகராட்சிகளும் பாஜக வசம்தான் உள்ளது. அங்கு பாஜக சார்பில் மேயர்கள் உள்ளனர். இந்த நிலையில் கிழக்கு மற்றும் தெற்கு
டெல்லி
மாநகராட்சி மேயர்கள் சமீபத்தில் அளித்த பேட்டிகளில், நவராத்திரி விழாவின்போது கோவில்களுக்கு அருகே இறைச்சிக் கடைகள் திறக்கப்படுவதால் மக்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது.
இறைச்சிக் கடைகளிலிருந்து வரும் நாற்றம், இறைச்சிக் கழிவுகளை சாலையோரம் கொட்டுவதால் நாய் வந்து அதை திண்கிறது, நவராத்திரி சமயத்தில் பூண்டு, வெங்காயம் கூட யாரும் சாப்பிடுவதில்லை. இறைச்சிக் கடைகளைப் பார்த்தால் மக்களுக்கு அறுவறுப்பாக இருக்கும் என்பது உள்ளிட்ட காரணங்களைக் கூறி நவராத்திரி சமயத்தில் இறைச்சிக் கடைகளை திறக்கக் கூடாது என்று இந்த மேயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த கூற்று பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது. நவராத்திரி சமயத்தில் இறைச்சிக் கடைகளை திறக்கக் கூடாது, விற்கக் கூடாது என்று கூறுவது அடிப்படை சுதந்திரத்திற்கு விரோதமானது. உணவு சுதந்திரத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று பலரும் கூறியுள்ளனர். இறைச்சி சாப்பிடாதவர்களை விட சாப்பிடுபவர்கள்தான் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்களின் உரிமையை யாரும் பறிக்கக் கூடாது என்று இவர்கள் வாதிடுகின்றனர்.
இதற்கிடையே, இந்தியா டுடே இதழ் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியாவில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இறைச்சி சாப்பிடுவதாக அது கூறியுள்ளது. தேசிய அளவில் தென் மாநிலங்கள், ஒடிஷா, மேற்கு வங்காளம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் 98 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இறைச்சி சாப்பிடுபவர்கள்தான். இறைச்சி சாப்பிடாதவர்கள் வெறும் 2 முதல் 3 சதவீதத்தினரே உள்ளனர்.
அதேசமயம், குஜராத்தில் இறைச்சி சாப்பிடுவோர் எண்ணிக்கை 40 சதவீத அளவில்தான் உள்ளது. அங்கு இறைச்சி சாப்பிடாதோர் அதிகமாக உள்ளனர். பாஜக ஆளும் கர்நாடகத்தில் கூட 80 சதவீதம் பேர் இறைச்சி சாப்பிடுகின்றனர். மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிராவில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் இறைச்சி சாப்பிடுபவர்கள்தான்.
டெல்லியைப் பொறுத்தவரை 64 சதவீதம் பேர் இறைச்சி சாப்பிடுகிறார்கள் என்று இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 36 சதவீதம் பேர்தான் இறைச்சி சாப்பிடாதவர்கள். இந்த 36 சதவீதம் பேருக்காக 64 சதவீதம் பேரை காயப் போடுவது நியாயமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. டெல்லியில் பெரும்பாலானவர்கள் இறைச்சி சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கும் நிலையில் இறைச்சித் தடை அங்கு எந்த அளவுக்கு சரிப்பட்டு வரும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இறைச்சி சாப்பிடுவதை தடை செய்பவர்கள், இறைச்சி விற்பனை செய்வதை தடை செய்பவர்கள், இறைச்சியை ஏற்றுமதி செய்வதற்கும் தடை விதிக்கலாமே என்றும் பலர் கோபமாக கேட்கின்றனர். இந்தியாவிலிருந்து மேலை நாடுகளுக்கு அதிக அளவில் இறைச்சி, குறிப்பாக மாட்டுக் கறி ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த செய்திகாங்கிரஸுக்கு காத்திருக்கும் சவால்கள்… சோனியா கவலை!