மைசூரு சிற்ப கலைஞர் அருண் யோகிராஜ் செதுக்கிய, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையை, பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வழங்கினார். மோடி பாராட்டி மகிழ்ந்தார்.
மைசூரு சாம்ராஜ் சாலையில் வசிப்பவர் அருண் யோகிராஜ். சிற்ப கலை குடும்பத்தில் பிறந்த இவரது தாத்தா பசவண்ணா ஆச்சார், மைசூரு உடையார் சமஸ்தான சிற்பியாக விளங்கியவர்.இவரது குடும்பத்தினர், ஜெயசாமராஜேந்திரா உடையார் மன்னருடன் நெருங்கி பழகியவர்கள்.
அவரது காலத்தில் அரண்மனை வளாகத்தில் உள்ள காயத்ரி மற்றும் புவனேஸ்வரி கோவில்களை இந்த குடும்பத்தினர் கட்டினர்.மேலும், கே.ஆர்.எஸ்., அணை முன் நிறுவப்பட்டுள்ள காவிரி தாய் சிலை வடிவமைத்தவரும் அவர்களையே சாரும். தந்தை யோகிராஜும் சிற்ப கலைஞர். அவருடன் இணைந்து பல சிற்பங்களை செதுக்கி தன்னையும் ஒரு சிற்பியாக உருவாக்கி கொண்டார்.
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி, கேதார்நாத்தில் திறந்து வைத்த ஆதி சங்கராச்சார்யார் சிலை வடிவமைத்ததும் அருண் யோகிராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது கல்லில் சுபாஷ் சந்திர போஸ் சிலை செதுக்கியுள்ளார். ஒரே கல்லில் இரண்டடி சிலையாக இது உள்ளது.
இதை மைசூரு பா.ஜ., – எம்.பி., பிரதாப் சிம்ஹா உதவியுடன் பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்து அவருக்கு பரிசாக வழங்கினார்.பிரதமரும், அவரது திறமையை வெகுவாக பாராட்டி, ஆதி சங்கராச்சார்யார் சிலை குறித்தும் நினைவு கூர்ந்தார்.
அருண் யோகிராஜ் கூறியதாவது:இந்திய சுதந்திரத்துக்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போசின் சிலை, டில்லி இந்தியா கேட் பகுதியில் நிறுவப்படும் என்று பிரதமர் சமீபத்தில் கூறிய போது எனக்குள் பெரும் ஈர்ப்பு ஏற்பட்டது.அன்றே அவரது சிலை செதுக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். சிலை செதுக்குவதற்கு ஒரு மாதம் ஆனது.இவ்வாறு அவர் கூறினார்.
– நமது நிருபர் –
Advertisement