நெல்லை: நெல்லை மாவட்டம் ஆதிச்சநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியின்போது, நெல் உமிகள் கொண்ட சங்க காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஆதிச்சநல்லூரில் ஏற்கெனவே கடந்த 1876, 1902, 1905, 2004, 2005-ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டினர் மற்றும் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் சார்பாக 5 கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் சூன் 2020 முதல் மேற்கொள்ளப்படும் 6-ஆம் கட்ட அகழாய்வுப் பணி 25 மே 2020 முதல் துவங்கியது. பின்னர்கொரோனா தொற்று காரணமாக அகழ்வாய்வு பணிகள் முடங்கிய நிலையில், மீண்டும், கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி தொடர்ந்து 7 மாத காலமாக நடந்து வருகிறது. அதேவேளையில், ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.
தற்போது ஆதிச்சநல்லூர் பகுதியின் 3 இடங்களில் 32குழிகள் தோண்டப்பட்டு அகழ்வாய்வுபணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வின்போது, 62-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் எடுக்கப்பட்டுள்ளன. குடுவைகள், பானைகள், இரும்பு பொருட்கள், மணிகள் என ஏராளமான தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. கடந்த 2 தினங்களுக்கு முன்னர் அகழாய்வு பணியில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 2 நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தாமிரபரணி ஆற்றின் கரையோரம் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியின்போது, பெரிய முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த தாழியில் இருந்து, நெல்உமிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. மேலும் அந்த தாழியைச் சுற்றி 100-க்கும்மேற்பட்ட மண் கலயங்கள், சிறுபானைகள், இரும்பு வாள் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.