ஆட்டோ மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த உதவி ஆய்வாளரை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் பூந்தமல்லி- மவுண்ட் சாலையில் கடந்த 3-ம் தேதி நந்தம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் ஆட்டோ ஒன்றை காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் நிறுத்தும்படி கையசைத்துள்ளார். அப்போது ஆட்டோ அதிவேகமாக வந்து உதவி ஆய்வாளர் பொன்ராஜ் மீது மோதி விட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. படுகாயமடைந்த உதவி ஆய்வாளர் பொன்ராஜை சக காவலர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கையில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை முடிந்து மருத்துவ விடுப்பில் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இது தொடர்பாக பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற ஆட்டோவில் சென்றவர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் அதிவேகமாக சென்ற ஆட்டோ காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் மீது மோதி விட்டு செல்லும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் ஆட்டோ ஓட்டுநர், ஆட்டோவில் பயனித்தவர் யார் என்பது இதுவரை காவல்துறை கண்டுபிடிக்கவில்லை. ஆட்டோ தப்பி சென்ற சாலைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் ஆட்டோ எண் தெளிவாக இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் படுகாயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு இன்று காலை சந்தித்து பேசினார். உடல் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். மேலும் தேவையான அனைத்து மருத்துவ உதவியையும் காவல்துறை செய்து தரும் என்று உறுதியை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சென்னை: போக்குவரத்து விதியை மீறியதோடு பெண் காவலரை தரக்குறைவாக பேசிய இளைஞர் கைது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM