உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் கோரிக்கையை ஏற்று, முதன் முறையாக நேட்டோ உறுப்பு நாடு ஒன்று போருக்கான தளவாடங்களை உக்ரைனுக்கு அனுப்பி உதவ முன்வந்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கி 42 நாட்களை கடந்துள்ள நிலையில், முதன் முறையாக நேட்டோ உறுப்பு நாடான செக் குடியரசு போர் தளவாடங்கள் தொடர்பில் பகிரங்கமாக உக்ரைனுக்கு உதவியுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி ஜெ;லென்ஸ்கி முன்வைத்துள்ள கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, T-72 ரக இராணுவ டாங்கிகள் மற்றும் பீரங்கிகளை செக் குடியரசு அனுப்பி வைத்துள்ளது.
இது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பானது நேட்டோ நாடுகளுக்கு எதிராக விரிவடையலாம் என்ற அச்சத்தின் மத்தியிலேயே, செக் குடியரசு துணிச்சலாக உக்ரைனுக்கு உதவ முன்வந்துள்ளது.
நேட்டோ நாடுகள் இதுவரை போருக்காக பெரிய அளவில் ஆயுதங்களை அளித்து உக்ரைனுக்கு உதவ முன்வரவில்லை.
டாங்கிகள், போர் விமானங்கள் என உதவக் கேட்டு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கெஞ்சியும் நேட்டோ உறுப்பு நாடுகள் ரஷ்யா மீதான அச்சத்தில் மறுத்து வந்துள்ளது.
மட்டுமின்றி, அமெரிக்கா வாயிலாக 28 MiG போர் விமானங்களை உக்ரைனுக்கு அளிக்கும் போலந்தின் முடிவும் கடைசி கட்டத்தில் ரத்து செய்யப்பட்டது.
ஆனால், முதன் முறையாக செக் குடியரசு T-72 ரக ஆபத்தான டாங்கிகளை உக்ரைனுக்கு ரயில் மூலம் அனுப்பி வைத்துள்ளது.
இது தொடர்பில் செக் குடியரசின் பாதுகாப்பு அமைச்சர் Jana Cernochova நாடாளுமன்றத்தில் தெரிவிக்கையில், செக் குடியரசு தன்னால் இயன்றவரை உக்ரைனுக்கு உதவும் என்பதையும், இலகுவான மற்றும் கனரக இராணுவ தளவாடங்களை அனுப்பி தொடர்ந்து உதவும் என்பதையும் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ப்ராக் மற்றும் அண்டை நாடான ஸ்லோவாக்கியாவும் சேதமடைந்த உக்ரேனிய இராணுவ தளவாடங்களை பழுதுபார்ப்பதற்கும் மறுசீரமைப்பதற்கும் உதவ முன்வந்துள்ளன.
ரஷ்ய துருப்புக்களைத் தடுக்க அதிக டாங்கிகள், விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை அனுப்பி உதவுமாறு கடந்த வாரம் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.