சேலம்: உலகிலேயே உயரமான முத்துமலை முருகனுக்கு இன்று ஹெலிகாப்டர் மலர்தூவ கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா என கோஷம் எழுப்ப 146 அடி கொண்ட அழகன் முருகனுக்கு இன்று குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது. 90 சிவாச்சாரிகளை கொண்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள புத்திர கவுண்டம்பாளையம் மலைப்பகுதியில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி, உலகிலேயே உயரமான முத்துமலை முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
146 உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த முருகன் சிலை உலகிலேயே உயர்ந்த முருகன் சிலை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே உயரமாலை முருகன் சிலை மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் அமைக்கப்பட்டிருந்தது. அதன் உயரம் 140 என்ற நிலையில், தற்போது சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள முத்துமலையில் 146 உயரமுள்ள முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
முத்துமலை முருகன் சிலை 3 ஆண்டுகளாக திருப்பணி திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதி குழுவினர் மூலமாக நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் முடிவடைந்த தால், இன்று 146 அடி உயர முருகன் சிலைக்கு வெகு விமரிசையாக குடமுழுக்கு நடத்தப்பட்டது. 90சிவாச்சாரிகள் கலந்துகொண்டு, குடமுழுக்கு விழாவை விமரிசையாக நடத்தினர். கும்பாபிஷேகத்தின்போது ஹெலிகாப்டர்கள் மலர் தூவ, பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்ப கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. அத்துடன் கும்பாபிஷேக தீர்த்தமும் ஹெலிகாப்டர் மூலம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
இந்த குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியிலும் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த முத்துமலை முருகன் கூறிய கோயிலின் உரிமையாளர் ஸ்ரீதர், முத்துமலைமுருகன் கோவில் அமைக்க, முருகனின் ஆறுபடை வீடுகளிலில் இருந்து மண்கள் கொண்டுவரப்பட்டு முருகன் சிலை வடிக்கும் பணியானது தொடங்கப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு முருகனுக்காக மிக உயர்ந்த கோவிலை கட்ட வேண்டும் என்பது என் தந்தையின் விருப்பமாக இருந்தது. அப்போது கட்டத் தொடங்கிய இக்கோவில் தற்போது கட்டுமான பணிகள் நிறைவடைந்து, கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டுள்ளது என்று சந்தோஷத்துடன் தெரிவித்தார்.
மேலும், நாங்கள் இந்த கோவிலை கட்ட வேண்டும் என முருகன் விரும்பியதால்தான் எங்களால் இதை செய்ய முடிந்தது என்று கூறியவர், உலகின் உயர்மான முருகன் சிலைஅமைக்கப்பட்டு வருவது குறித்த தகவல் அறிந்து தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் முத்துமலை வந்து, முருகனை தரிசித்து சென்றனர். தற்போது, நாங்களும், முத்துமுலை முருகனின் வேல்மீது பக்தர்கள் நேரடியாக பால் அபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும், பக்தர்கள் ஹெலிகாப்டரில் பயணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.