நேற்று மாலை ZEE5 தமிழ் பிரிவின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இயக்குநர்கள் வெற்றிமாறன், ஏ எல் விஜய், கிருத்திகா உதயநிதி, நடிகர் பிரகாஷ்ராஜ், வாணிபோஜன், விமல், காளிதாஸ் ஜெயராம் என பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். விழாவில் ZEE 5 – ன் புதிய தமிழ் தயாரிப்புகள் குறித்து அறிமுகப்படுத்தப்பட்டது.
ராதிகா சரத்குமார் தயாரிப்பில் இயக்குநர் வசந்தபாலன் இயக்கும் தலைமைச்செயலகம் வெப் சீரிஸ் பற்றிய அறிமுகம் நடந்தது. மேடையில் வசந்தபாலன் இந்தப்படத்தின் கதை குறித்துப் பகிர்ந்துகொண்டார். அரசியலின் மறுபக்கம் இதில் விலாவாரியாக அலசப்படும் என்பது அவரது பேச்சில் தெரிந்தது. கிருத்திகா உதயநிதியும் முதல் முறையாக வெப் சீரிஸில் காலடி வைக்கிறார். பயணம் தொடர்பான கதையில் காளிதாஸ் ஜெயராம், தான்யா நடிக்கிறார்கள். இதன் வசனத்தை ஆர்.அசோக் எழுதுகிறார்.
டான்ஸ் சம்பந்தப்பட்ட படத்தை டைரக்டர் ஏ.எல். விஜய் தயாரிக்கிறார். குழந்தைகளின் உலகமும் நடனமும் இந்தப் படத்தின் முக்கிய சாரமாக இருக்கும். இயக்குநர் பிரியா, நடிகர் இயக்குநர் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெப் சீரிஸ் ஒன்றை இயக்குகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் அமீர் நடிக்க ‘நிலமெல்லாம் ரத்தம்’ என்ற வெப் சீரிஸும் வெளியாகவுள்ளது. சில படங்களின் முன்னோட்டமும் வெளியிடப்பட்டன. நடிகை ராதிகாவின் கார்மேகம் திரில்லர் வடிவிலும், எஸ்.ஆர் பிரபாகரன் இயக்கும் ‘கொலைகார கை ரேகைகள்’, நாகா இயக்கத்தில் ‘ஐந்தாம் வேதம்’திரில்லரின் ட்ரைலரும் திரையிடப்பட்டது.