சுகாதார பணிப்பாளர் நாயகம் வெளியிட்ட ஏப்ரல் 4ஆம் திகதி அறிக்கையில், 2020 நவம்பரில் தொடங்கிய இரண்டாவது அலையின் பின்னர் ,கொவிட்-19 வைரசு தொற்று தொடர்பான இறப்புகள் முதல் தடவையாக எதுவும் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 4 ஆம் திகதி, சுகாதார அதிகாரிகளால் 112 கொவிட்-19 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 61 ஆயிரத்து 991 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் ,வைரசு தொற்றால் ஏற்பட்ட மொத்த இறப்புகள் 16 ஆயிரத்து 485. இருப்பினும் 22 மில்லியன் சனத்தொகையில் பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டதன் பிரதிபலனாக நாளாந்தம் ஏற்படும் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைவடைந்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை தரவுகளின்படி, தற்போது சராசரியாக நாளாந்தம் 100-120 நோயாளிகள் அடையாளம் காணப்படுவதுடன் நாளொன்றுக்கு சராசரி 10 க்கும் குறைவாகவே இறப்புகள் காணப்படுவதுடன், 8 ஆயிரத்து 218 நோயாளிகள் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 நிலைமை தொடர்பில், தொற்றுநோயியல் பிரிவின் தலைமை தொற்று நோய் நிபுணர் சமித்த கினிகே கூறுகையில் , பெப்ரவரி மாத நடுப்பகுதியில் இருந்து நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடைவதை காணமுடியும் என்றும், கொவிட் 19 அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,இதுவரை 17 மில்லியன் மக்கள் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர், 14.4 மில்லியன் மக்கள் முதல் இரண்டு டோஸ்களைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 7.8 மில்லியன் மக்கள் மட்டுமே தடுப்பூசியின் பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ளனர்.
அத்துடன் எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் இருந்து தடுப்பூசியை ஏற்றிக்கொளாதவர்கள் ,பொது இடங்களை பயன்படுத்துவதை தடை செய்வதற்கு சுகாதார அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாகவும், எந்தவித தாமதம் இன்றி பூஸ்டர் டோஸைப் பெற்றுக்கொள்ளுமாறும், எதிர்காலத்தில் கொவிட்டின் புதிய அலைகளை எதிர்கொள்ள அடிப்படை சுகாதார ஆலோசனை வழிகாட்டில்களை பின்பற்றுமாறும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.