மாண்டியா: ‘எங்கள் நாட்டின் பிரச்சனைகளைப் பற்றி அல்கொய்தா பேச வேண்டிய தேவை இல்லை’ என மாணவி முஸ்கான் கானை அல்கொய்தா பாராட்டிய விவகாரத்தில், அவரின் தந்தை பதில் கொடுத்துள்ளார்.
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் உச்சத்தில் இருந்தபோது மாண்டியாவில் பிஇஎஸ் கல்லூரிக்கு புர்கா அணிந்து வந்த மாணவி முஸ்கான் கானை கண்டதும் கண்டதும் காவித் துண்டு அணிந்த மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள், அவர் முன் நின்று ”ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷம் எழுப்பினர். மாணவி முஸ்கான் எந்தவித அச்சமும் கொள்ளாமல் அம்மாணவர்களுக்கு எதிராக ”அல்லாஹு அக்பர்” என்று குரல் எழுப்பியபடி தன் பாதையில் நடந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகின.
மாணவி முஸ்கான் கானின் தைரியத்தை பலரும் பாராட்டினர். இந்தச் சம்பவம் நடந்து பல நாட்களுக்குப் பிறகு பயங்கரவாத அமைப்பான அல் கொய்தாவின் தலைவரான அய்மன் அல்-ஜவாஹிரி மாணவி முஸ்கானைப் பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். உலகின் மிக பயங்கரமான தீவிரவாதியாக, உலக நாடுகளால் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் குற்றவாளியான இந்த ஜவாஹிரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறந்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனால், இந்த தகவலுக்கு மாறாக மீண்டும் வீடியோ மூலம் தோன்றியதுடன், தான் பேசிய 7 நிமிட வீடியோவில் ஜவாஹிரி மாணவி முஸ்கான் கானை வெகுவாக பாராட்டி இருந்தார்.
இவரின் பாராட்டுக்கு மாணவியின் தந்தை எதிர்வினை ஆற்றியிருக்கிறார். இதுதொடர்பாக மாணவி முஸ்கான் கானின் தந்தை முகமது ஹுசைன் அளித்த பேட்டியில், “நேற்று பிற்பகலில் தான் இந்த விவகாரம் எனக்கு தெரிந்தது. ஜவாஹிரி யார் என்றுக் கூட எனக்குத் தெரியாது. அவர் என் மகள் பெயரை பயன்படுத்து மிகத் தவறு. எனது தாய் நாட்டில் நாங்கள் மகிழ்ச்சியாகவே உள்ளோம்.
எங்கள் நாட்டின் பிரச்சனைகளைப் பற்றி அல்கொய்தா பேச வேண்டிய தேவை இல்லை. இதுபோன்றவர்கள் தான் நமது அமைதியை கெடுக்கிறார்கள். மாண்டியாவில் பிறந்த நாங்கள் இங்கு சகோதரர்களை போலவே வாழ்ந்து வருகிறோம். சில சம்பவங்கள் நடந்திருக்க கூடாது. இப்போது எங்களால் அமைதியான வாழ்க்கையை வாழ முடியவில்லை. எங்களின் அமைதியின்மைக்கு என்ன காரணம் என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும். நமது சமூகத்தில் மத நல்லிணக்கத்துக்கு தீங்கு ஏற்படுத்தியது யார் என்பதையும் அரசு கண்டறிய வேண்டும்.
ஹிஜாப் அணிந்து சென்றதற்காக எனது மகளை கல்லூரி நிர்வாகம் தேர்வெழுத அனுமதிக்கவில்லை. முஸ்கான் அடுத்த வருடம் தனது படிப்பை தொடருவார். எங்கு ஹிஜாப் அனுமதிக்கப்படுகிறதோ அங்கு அவரை சேர்த்து நான் படிக்க வைப்பேன். ஜவாஹிரி வீடியோ தொடர்பாக முஸ்கானிடம் பகிர்ந்துகொண்டேன். அதை கேள்விப்பட்டு அவளும் கலக்கமடைந்தாள். ஏற்கனவே தனது கல்வியை நினைத்து வருந்திக்கொண்டிருக்கும் முஸ்கானுக்கு இதுபோன்ற சம்பவங்கள் மேலும் அதிர்ச்சியைத் தான் கொடுக்கின்றன” என்று முகமது ஹுசைன் வேதனை தெரிவித்தார்.