பெங்களூரு : முந்தைய ஆண்டு தென் மேற்கு பருவ மழை, கோடை மழை வழக்கத்தை விட அதிகமாக பெய்ததால் கர்நாடகாவின் பல இடங்களில், நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்தது. சில இடங்களில் குடிநீர் பிரச்னை ஏற்படவில்லை. ஆனால் வட மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.முந்தைய ஆண்டு வழக்கத்தை விட, அதிகமான மழை கொட்டியதால், கோடைக்காலத்தில் குடிநீர் பிரச்னை இருக்காது என, நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஆனால் கொப்பல், பல்லாரி, விஜயநகர், கலபுரகி, ராய்ச்சூர், பீதர் மாவட்டங்களின், 350 க்கும் மேற்பட்ட கிராமங்களில், குடிநீர் தட்டுப்பாடு தலை விரித்தாடுகிறது.தற்போதைக்கு பிரச்னை இல்லையென்றாலும், மே மாதம் யாத்கிர், சித்ரதுர்கா, துமகூரு, உத்தரகன்னடா, குடகு, சிக்கமகளூரு, தாவணகரேவில் குடிநீர் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.கொப்பலின் 150க்கும் மேற்பட்ட கிராமங்களில், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண, மாவட்ட நிர்வாகம் கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டுள்ளது. ஆனால் பிரச்னை சரியாகவில்லை.இது போல கலபுரகி, ராய்ச்சூர், யாத்கிர், பீதர், பல்லாரியின் ஏராளமான கிராமங்களுக்கு, டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
Advertisement