புதுடெல்லி: இன்டர்நெட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு ஆப்டிகல் பைபர் உள்கட்டமைப்புகளை அமைப்பதற்கு ஒரே மாதிரியான கொள்கைகளை அறிவிக்காதது ஏன்? என்று ஒன்றிய அரசுக்கு திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.மக்களவையில் கேள்வி நேரத்தில் பேசிய மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், `மாண்புமிகு அமைச்சர், ஆப்டிகல் பைபர் கேபிள் மூலம் இன்டர்நெட் இணைப்பு வழங்குவதில் உள்ள சிக்கல்களை கூறினார். ஆனால், இது போன்ற காரணங்களை கூறுவது இதுவே முதல் முறையல்ல. முந்தைய தொலைத்தொடர்பு அமைச்சர்களும் இது போன்ற காரணங்களை கூறி தங்களின் இயலாமையை வெளிப்படுத்தி உள்ளனர்,’ என்று கூறினார். இதைத் தொடர்ந்து அவர் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு:* வீடுகளுக்கு பைபர் கேபிள் வசதி என்பது இன்று உச்சத்தை தொட்டுள்ளது. மக்களும் அதிவேக இன்டர்நெட் வசதிகளை கோரும்போது, தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மற்றும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் பைபர் லைன்களை அமைக்கும் வகையில் ஒன்றிய அரசு ஒரு நாடு தழுவிய கொள்கையை உருவாக்கி, அதை ஆபரேட்டர்களும் எளிமையாக அணுகும் வகையில் ஏன் அமல்படுத்த கூடாது?* ஒன்றிய அரசு பாரத்நெட் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் வசதிகளை வழங்க முயற்சி செய்து வருகிறது. டிராய் அமைப்பும் ஒன்றிய அரசின் வசம்தான் உள்ளது. எனவே, சரியான கொள்கைகளை வகுத்தால் இத்திட்டம் சிறப்பாக அமையும். ஆனால், ஒன்றிய அரசு ஏன் இத்திட்டத்தில் முழு கவனம் செலுத்துவதில்லை? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.