அமராவதி: ஆந்திராவில் 2019-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, இரண்டைரை ஆண்டுகளுக்கு பின்னர் அமைச்சர்கள் மாற்றப்படுவர் என்று அறிவித்தார். இந்நிலையில், 3 ஆண்டுகள் நெருங்குவதால், அமைச்சர்களை மாற்ற ஜெகன்மோகன் ரெட்டி முடிவெடுத்துள்ளார்.
இதற்கிடையில் டெல்லி சென்ற அவர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா உட்பட பலரை சந்தித்து மாநில வளர்ச்சி பணிகள், நிதி பற்றாக்குறை போன்றவை குறித்து விவாதித்தார். டெல்லியில் இருந்துதிரும்பிய முதல்வர் ஜெகன், அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தனை நேற்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது, வரும் 11-ம் தேதி புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும்படி ஜெகன் கோரிக்கை விடுத்தார். அமராவதியில் இன்று காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
அப்போது அனைத்து அமைச்சர்களிடம் இருந்தும் ராஜினாமா கடிதம் பெறப்பட உள்ளது. இதனை தொடர்ந்து 8-ம் தேதி புதிய அமைச்சரவை பட்டியல் ஆளுநரிடம் வழங்கப்பட்டு, அவர்களுக்கு வரும் 11-ம் தேதி பதவி பிரமாணம் செய்யப்பட உள்ளது.