தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில். இத்தல இறைவனை காசிபர், கவுதமர், பரத்துவாசர், அத்திரி போன்ற முனிவர்கள் வணங்கி அருள் பெற்றுள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க இவ்வழியே வந்த காசிப முனிவர் இங்கு லிங்கத் திருமேனி எழுப்பி வழிபாடு நடத்தினாராம்.
உமையாள், சிவபரம்பொருளிடம் திருமந்திரத்தை உபதேசிக்குமாறு கேட்டு, மந்திர உபதேசம் பெற்ற ஊர் ஆதலால், இவ்வூருக்கு ‘திருமந்திர நகர்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. கயத்தாரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த குறுநிலமன்னனான சங்கரராம பாண்டியன், இத்தல இறைவனை தரிசித்து குழந்தைப் பேறு பெற்றதால் கோயில் எழுப்பினான்.
சங்கரராமப் பாண்டிய மன்னன் எழுப்பியக் கோயிலாததால் இத்தல இறைவனுக்கு சங்கர ராமேஸ்வரர் என்ற திருநாமம் சூட்டப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாவில் சித்திரைப் பெருந்திருவிழா சிறப்பானதாகும். இந்த ஆண்டு சித்திரைப் பெருந்திருவிழா இன்று (7-ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக யானை மீது கொடிப்பட்டம் ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
விநாயகர் வழிபாட்டுடன் தொடர்ந்து தேர்க்கால் முகூர்த்த விழாவும் நடந்தது. கொடியேற்றத்திற்குப் பிறகு கொடிமரத்திற்கு சிறப்பு அபிசேகங்களும் அதனைத் தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. இத்திருவிழா நாள்களில் தினமும் சுவாமியும், அம்பாளும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருதல் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், வரும் 16-ம் தேதி காலை 8.30 மணிக்கு நடக்கிறது.