‘டேய்… அவன் எப்டி போட்டாலும் அடிக்கிறாண்டா’ என்ற வசனத்திற்கு ஏற்ற வகையில் ஐ.பி.எல்லின் ஒவ்வொரு சீசனிலுமே நம்பவே முடியாத ஒரு முரட்டுத்தனமான இன்னிங்ஸை எதோ ஒரு வீரர் ஆடிவிடுவார். இந்த சீசனின் தொடக்கத்திலேயே அப்படியொரு ஆட்டத்தை பேட் கம்மின்ஸ் ஆடியிருக்கிறார். மும்பைக்கு எதிராக வெறும் 15 பந்துகளில் 56 ரன்களை அடித்திருக்கிறார். இதில், ஹைலைட்டாக அமைந்தது டேனியல் சாம்ஸின் ஒரே ஓவரில் பேட் கம்மின்ஸ் அடித்த அந்த 35 ரன்கள்தான்.
பேட் கம்மின்ஸ் பேட் வீசிய வேகத்தில் ஒரு புயல், ஒரு சுனாமி, ஒரு சூறாவளி எல்லாமே உருவாகிவிட்டன. நெஞ்சில் ஈரமே இன்றி சொந்த நாட்டின் சக பந்துவீச்சாளரையே பிறுபிறுவென பிரித்திருந்தார்.
‘உங்களிடம் ஒரு சாக்லெட்டை கொடுப்பது போலவே வந்து ஏமாற்றிவிட்டால் எப்படியிருக்கும்? அதையேத்தான் பேட் கம்மின்ஸ் மும்பைக்குச் செய்திருக்கிறார்’ என ரவி சாஸ்திரி போட்டிக்குப் பிறகு பேசியிருந்தார். ரவி சாஸ்திரி சொன்னதுதான் நிகழ்ந்திருந்தது. மும்பை முதலில் பேட்டிங் செய்து 161 ரன்களை எட்டியிருந்தது. கொல்கத்தாவிற்கு டார்கெட் 162. பிட்ச் பெரிதாக பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கவில்லை என்பதே அனைவரின் கருத்தாகவும் இருந்தது. அதனால் மும்பை அணி தடுமாறியதை போன்றே கொல்கத்தாவும் சேஸிங்கில் தடுமாறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை விட்டது. கிட்டத்தட்ட 13வது ஓவர் வரைக்குமே போட்டி மும்பைக்கு சாதகமாகவே இருந்தது. இன்னும் ஒன்றிரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டால் மும்பை வென்றுவிடலாம் எனும் சூழல் நிலவியது. ஆனால், இதெல்லாம் பேட் கம்மின்ஸின் என்ட்ரி வரைக்கும்தான்!
‘Mayyyyyy I Comeeee in?’ என மாஸாக அவர் உள்ளே வந்த பிறகு ஆட்டம் மாற தொடங்கியது. அத்தனை பேருமே டேனியல் சாம்ஸிற்கு எதிராக கம்மின்ஸ் அடித்த அந்த ஒரு ஓவரைத்தான் குறிப்பிட்டு கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர் அதற்கு முன்பாகவே தன் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டார்.
மும்பையின் முதுகெலும்பான பும்ராவின் ஓவரிலேயே லெக் சைடில் ஒரு சிக்ஸரையும் தேர்டு மேனில் பவுண்டரியும் அடித்துதான் டேனியல் சாம்ஸின் ஓவருக்கே வார்ம் அப் ஆகியிருப்பார்.
சாம்ஸின் ஓவருக்குள் நுழையும்போதே கம்மின்ஸின் ஸ்ட்ரைக்ரேட் 250 ஐ தாண்டிவிட்டது. கிட்டத்தட்ட ஒரு வெறியாட்டத்திற்கான முன்னோட்டத்தை கம்மின்ஸ் வெற்றிகரமாக நிகழ்த்தி முடித்திருந்தார்.
இந்தச் சமயத்தில்தான் டேனியல் சாம்ஸ் வந்து மாட்டிக்கொண்டார். கொல்கத்தா 5 ஓவர்களில் 35 ரன்கள் எடுக்க வேண்டிய சூழல் இருந்தது. இப்போதும் கூட மும்பைக்கும் ஒரு வாய்ப்பு இருப்பதாகவே தோன்றியது. ஏனெனில், கொல்கத்தா 5 விக்கெட்டுகளை இழந்திருந்தார்கள். இன்னும் ஒரு விக்கெட் கிடைத்தால் கூட மும்பை பக்கமாக போட்டி மாறுவதற்கான வாய்ப்பு இருந்தது. அதனால் கொல்கத்தா கொஞ்சம் ஜாக்கிரதையாக ஆடி இறுதி வரை ஆட்டத்தை கொண்டு சென்று வெல்லும் என அனுமானிக்கப்பட்டது. ஆனால், அடுத்த 10 நிமிடங்களில் ஒரே ஓவரில் பேட் கம்மின்ஸ் ஆட்டத்தை முடித்துவிட்டார்.
டேனியல் சாம்ஸ் வீசிய அந்த ஓவரில் மட்டும் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளை அடித்திருந்தார். எல்லாமே லாங் ஆனிலும் லெக் சைடிலும் மட்டுமே அடிக்கப்பட்டிருந்தன.
ஓவர் தி விக்கெட், ரவுண்ட் தி விக்கெட் என சாம்ஸ் மாறி மாறி வீசியும் ஒரு ப்ரயோஜனமும் இல்லை. EA Cricket ஐ Easy மோடில் ஆடுவதை போல அநாயாசமாக அடித்து தள்ளினார். இடையில் கம்மின்ஸ் அடித்த ஒரு பெரிய ஷாட்டை சூர்யகுமார் யாதவ் பவுண்டரி லைனில் கஷ்டப்பட்டு சிரமப்பட்டு உள்ளே வெளியே ஆட்டமெல்லாம் ஆடி அசத்தலாக கேட்ச் பிடித்திருந்தார். ஆனால், சாம்ஸின் கிருபையால் அது நோ-பாலாக அறிவிக்கப்பட்டது. சூர்யகுமாரின் அந்த அடிபொலி கேட்ச்சிற்கு Wasted முத்திரை குத்தப்பட்டது. 14 பந்துகளிலேயே பேட் கம்மின்ஸ் அரைசதத்தை கடந்திருந்தார். அத்தோடு எண்ட் கார்டு போடுவார் என நினைக்கையில் அந்த ஓவரின் கடைசி பந்தையும் சிக்ஸராக்கி மேட்ச்சை 16 வது ஓவரிலேயே முடித்து வைத்தார்.
என டேனி மோரிசன் கமெண்ட்ரி பாக்ஸில் கலகலத்திருந்தார். நிக் நைட் மட்டுமில்லை. எதிரணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஏன் கொல்கத்தாவின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரே இதை எதிர்பார்க்கவில்லை. இன்னும் ஒருபடி அதிகமாக இந்த இன்னிங்ஸை நானே எதிர்பார்க்கவில்லை எனக்கே இது சர்ப்ரைஸ்தான் என பேட் கம்மின்ஸே கூறி மும்பை ரசிகர்களை மேலும் புண்படுத்தினார்.
டேனியல் சாம்ஸும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் என்பதால் பேட் கம்மின்ஸ் கொஞ்சம் கூடுதல் உரிமையுடனே பேட்டை நீட்டிவிட்டார். டி20 போட்டிகளில் டேனியல் சாம்ஸும் ஒரு அபாயகரமான பௌலரே. 2019 பிக்பேஷ் லீக் ஒரே சீசனில் 30 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பிக்பேஷ் லீகின் வரலாற்றிலேயே ஒரே சீசனில் வேறு எந்த பௌலரும் இத்தனை விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை எனும் ரெக்கார்டை செய்திருந்தார். அடுத்தடுத்த சீசன்களிலுமே ஓரளவிற்கு நன்றாகத்தான் வீசியிருக்கிறார். ஆனால், டெத் ஓவர்களில் சாம்ஸ் கொஞ்சம் வீக்காகவே இருந்திருக்கிறார். டெத் ஓவர்களில் அவரின் எக்கானமி ரேட் 10-ஐ தொடுமளவுக்கு இருக்கிறது. இங்கே ஐ.பி.எல் லிலுமே இந்த சீசனின் முதல் போட்டியில் டெல்லிக்கு எதிராகக் கடைசிக்கட்டத்தில் அக்சர் படேல் மற்றும் லலித் யாதவிற்கு ஒரே ஓவரில் 24 ரன்களை விட்டுக்கொடுத்தார். வெளியூர் ஆட்களே இத்தனை பாந்தமாக அடித்து வெளுக்க உள்ளூர்க்காரர் பேட் கம்மின்ஸ் அடிக்காமல் விட்டால்தான் ஆச்சர்யம்.
டேனியல் சாம்ஸ் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் பிறந்தவர். அவருக்கு உடன்பிறந்தவர்கள் மொத்தம் நான்கு பேர். அவரது குடும்பத்தில் டேனியல் சாம்ஸ்தான் கடைக்குட்டி. மூத்த அண்ணனுக்கும் இவருக்கும் 16 வயது வித்தியாசம். வீட்டுத் தோட்டத்தில் கிரிக்கெட் ஆடும்போது, கடைக்குட்டி என்பதால் இவர் கையில் பந்தை கொடுத்து வீசச் சொல்லி அண்ணன்கள் அடித்து வெளுப்பார்களாம். அப்படித்தான் நான் பௌலர் ஆனேன் என டேனியல் சாம்ஸ் கூறியிருக்கிறார்.
கிட்டத்தட்ட பேட் கம்மின்ஸும் இங்கே அதையேத்தான் செய்திருக்கிறார். சாம்ஸை அவரது குழந்தைப்பருவத்திற்கே அழைத்து சென்று மூத்த அண்ணனாக வெளுத்துவிட்டார். ஆனாலும், அடி கொஞ்சம் ஓவர்தான்!