அவனியாபுரம்:
மதுரை விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்கிறது. சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மக்களின் பிரசினையை உணராமல் அரசாங்கம் மக்களின் வரியில் அரசாங்கத்தை நடத்த முயற்சிக்கின்றனர். விலைவாசியை திரும்பப் பெறவேண்டும்.
நீட் தேர்வை பொறுத்தவரை தமிழகத்தில் அனைவரின் கருத்தும் நீட் வேண்டாம் என்பதுதான். ஆளுநரிடம் பலமுறை தீர்மானம் நிறைவேற்றி கொடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்விற்கு முற்றுப்புள்ளி வைக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வரின் துபாய் பயணம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப சுற்றுலா என்கிறார்கள், முதலீட்டை அதிகரிக்க சென்றதாக கூறுகிறார்கள். எதுவாக இருந்தாலும் தமிழகத்திற்கு நல்லது நல்ல நடக்கிறதா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
சொத்து வரி உயர்வை கண்டித்து வருகிற 11-ந் தேதி அனைத்து மாநகராட்சிகளிலும் தே.மு.தி.க. சார்பாக போராட்டம் நடைபெற உள்ளது. 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உயர்த்தலாம். ஆனால் 150 சதவீதம் என்பது ஒட்டுமொத்த மக்களும் தாங்க முடியாத சுமை, ஏற்கனவே பல பிரச்சினைகள் உள்ளது. விலைவாசி உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி உயர்வை நிச்சயமாக அரசு மறுபரிசீலனை செய்து திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.