காங்கிரஸ் வாக்கு வங்கி 4 சதவீதமாக குறைந்தது ஏன்?- பொதுமேடையில் கே.எஸ்.அழகிரி- செல்வபெருந்தகை வாதத்தால் பரபரப்பு

சென்னை:

தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு காலத்தில் அசுர பலத்துடன் இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் காலப்போக்கில் செல்வாக்கை இழந்து கூட்டணி இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற பரிதாபமான நிலையில் உள்ளது.

அது மட்டுமல்ல வாக்கு வங்கியும் குறைந்ததால் கூட்டணி சேர்ந்தாலும் தேர்தல் காலங்களில் தேவையான இடங்களை பெறுவதில் பெரும் சிரமப்படுகிறார்கள்.

அப்படியே சில இடங்களை பெற்றாலும் அதை கோஷ்டி தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கு வாங்கி தருவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் சாதாரண தொண்டர்கள் கட்சியின் நிலைமையை எண்ணி ஆதங்கப்படுகிறார்கள்.

எல்லோருக்கும் தெரிந்த இந்த விசயம் பொதுவெளியில் விவாதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக இளைஞர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சத்தியமூர்த்தி பவன் திடலில் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கு.செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தமிழகத்தில் 44 சதவீதம் வாக்கு வங்கியை கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி இப்போது 4 சதவீதமாக குறைந்துள்ளது. அதற்கு காரணம் தான்தான் தலைவர் என்று ஒவ்வொருவரும் தன்னையே முன்னிலை படுத்துகிறார்கள்.

தங்கள் பின்னால் இருப்பவர்கள் யாரோ அவர்கள்தான் எம்.எல்.ஏ., எம்.பி. ஆக முடியும் என்பதுபோல் பேசுகிறார்கள்.

ராகுல்காந்தி படத்தை ஸ்டாம்ப் அளவு படமாக போடுகிறார்கள். இந்த தலைவர்கள் படத்தை பெரிய அளவில் போடுகிறார்கள். இப்படி எந்த கட்சியிலாவது நடக்குமா? இப்படியே ஒவ்வொருவரும் செயல்படுவதால்தான் கட்சி செயலிழந்து வருகிறது.

நமக்கு தலைவர் ராகுல்காந்திதான். ராகுல்காந்தி அணி என்ற ஒரே அணிதான் நம்மிடம் இருக்க வேண்டும் என்பதை வெளிப்படையாகவே பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும்போது செல்வபெருந்தகையின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார். அவர் பேசும்போது, “எந்த கருத்தை எங்கே பேசுவது என்று இருக்கிறது. செல்வப்பெருந்தகை இந்த மாதிரி கட்சி விவகாரங்களை பொது இடங்களில் பேசக்கூடாது.

பொது இடங்களில் பேசும்போது நேர்மறையான கருத்துக்களையே சொல்வது நல்லது.

அதுதான் இளைஞர்களுக்கு உந்து சக்தியாக இருக்கும். இல்லாவிட்டால் சோர்ந்து போவார்கள் என்றார்.

இறுதியில் பேசிய அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி.சீனிவாசவ், “கூட்டம் மிகவும் குறைவாக இருந்ததற்கு ஆதங்கப்பட்டார். இளைஞர் காங்கிரசில் 7 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக அறிவித்துள்ளனர். ஆனால் குறைவான அளவில் தொண்டர்கள் திரண்டிருந்ததும் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது  என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.