கொழும்பு: இலங்கையில் பெரும் பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக உணவுப்பொருட்கள், எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். பார்லிமென்ட் முன்பாகவும் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த நிலையில், இலங்கை அரசின் வருவாயை அதிகரிக்கும் விதமாக கூடுதல் வரி விதிக்கும் மசோதா இன்று (ஏப்.,7) பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் நிலையில் வருவாயை அதிகரிக்கும் விதமாக பெரும் பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் மசோதாவை பசில் ராஜபக்சே தாக்கல் செய்திருந்தார். இந்த மசோதா பார்லிமென்டில் இன்று நிறைவேறியது. அதன்படி, இலங்கை ரூபாயில் 200 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுபவர்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும். தனிநபர்கள், நிறுவனங்களுக்கும் இந்த கூடுதல் வரி பொருந்தும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement