இலங்கையில் தப்பியோடிய சர்ச்சைக்குரிய நபரான எவன்ட் கார்ட் நிறுவனத்தின் நிஸ்ஸங்க சேனாதிபதியின் குடும்பம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிஸ்ஸங்க சேனாதிபதியின் மகன் செனுர யாப்பா சேனாதிபதி, தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக தமது குடும்பத்தினர் எந்த தவறும் செய்யவில்லை எனவும், ஆனால் நாட்டு மக்கள் தம்மை பல்வேறு வகையில் இணையம் ஊடாக துன்புறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நம்மை துன்புறுத்திய அனைவருக்கும் தெரியும், நாம் நாட்டுக்கு எந்தத் தவறும் செய்யவில்லை. எத்தனையோ பேருக்கு உதவி செய்தோம், நிறைய நன்கொடைகள் அளித்துள்ளோம். வீடும், உணவும் அளித்து, இந்த நாட்டை பாதுகாத்திருக்கிறோம்.
பதிலுக்கு எங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து துன்புறுத்தல்களும் அருவருக்கத்தக்கது.
இணையத்தில் எம்மை அவமதிக்கும் முன்னர், உங்களுக்கு இப்படி நடந்தால் நீங்கள் எப்படி உணருவீர்கள் என்று சிந்தியுங்கள். இது அருவருப்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிஸ்ஸங்க சேனாதிபதி தற்போதைய அரசாங்கத்தில் மிகவும் செல்வாக்கு மிக்கவர். எனினும் அவர் அரசாங்கப் பதவிகள் எதனையும் கொண்டிருக்கவில்லை. அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்த வார தொடக்கத்தில் மாலைதீவுக்கு சென்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, பொது மக்களின் பணத்தை கொள்ளையடித்ததாக கூறப்படும் நிஸ்ஸங்க சேனாதிபதியை கைது செய்வதற்கு இன்டர்போலின் உதவியைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் ஹேரத், நாடாளுமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.