வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இடஒதுக்கீடு வழங்குவதில் சமூக நீதி நிலைநாட்டப்படும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து சட்ட வல்லுநர்களுடன் உரிய ஆலோசனை நடத்தி, நிச்சயம் சமூக நீதி நிலைநாட்டப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 விழுக்காடு சிறப்பு ஒதுக்கீடு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: “வன்னியர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு சம்பந்தமாக இந்த அவையிலே கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதனடிப்படையிலே, ஜி.கே.மணி , கு.செல்வப்பெருந்தகை , தி.வேல்முருகன் ஆகியோரும், தரவுகளைக் கொண்டும், மதுரை உயர் நீதிமன்றத்திலே முறையாக வழக்கறிஞர்களை வைத்தும் வாதாடவில்லை என்று குற்றஞ்சாட்டக்கூடிய வகையிலே எதிர்க்கட்சித் தலைவரும் இங்கே தங்களுடைய கருத்துகளை எடுத்து வைத்திருக்கிறார்கள்.

வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 விழுக்காடு சிறப்பு ஒதுக்கீடு வழங்கக்கூடிய “தமிழ்நாடு சட்டம் 8/2001 தொடர்பாக உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளில் தமிழக அரசு தீவிரமாக வாதாடியது. அதிமுக அரசு கொண்டு வந்த சட்டம் என்றாலும், எங்களைப் பொறுத்தவரையில், ஏற்கெனவே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிய அரசு என்ற அந்த நிலையிலே, உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞரே வாதாடியிருக்கிறார்.

உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி, அபிசேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, வில்சன் உள்ளிட்டோர் தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சார்பிலே ஆணித்தரமாக வாதாடியிருக்கிறார்கள். இந்த வழக்கில் எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்வது, தேவையான ஆவணங்களைப் பதிவு செய்வது ஆகிய அனைத்திலும் தமிழக அரசு மற்றும் அதன் வழக்கறிஞர்கள் செயல்பாடுகள் மிகவும் பாராட்டத்தக்கதாக இருக்கிறது என உச்ச நீதிமன்றமே குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறது.

இந்தச் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான பரிந்துரை 2012-ல் வழங்கப்பட்டது. ஆனால், இதற்கான சட்டமுன்வடிவு எப்பொழுது வந்தது? 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு மாலையில் வரப் போகிறது என்று காலையில் செய்தி வருகிறது. அன்று மாலையில், குறிப்பாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக, இந்தச் சட்டமுன்வடிவு அவையிலே கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

2012 முதல் 2021 வரை உள்ள இடைவெளிக்குப் பிறகு, காலையில் தேர்தல் அறிவிப்பு; மாலையில் இச்சட்டம் என்று, அதுவும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகக் கொண்டு வந்து, 26-2-2021 அன்று நிறைவேற்றிய, அந்த அவசரம்தான் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வெளிவந்த இந்தத் தீர்ப்பிற்கு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது.

உச்ச நீதிமன்றமே இதுகுறித்த தீர்ப்பில், “We find that the Government has committed an error” என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. 26-2-2021-லிருந்தது யாருடைய தலைமையிலான அரசு என்பதைச் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மற்ற குறைகளை இந்த மன்றத்தில் நானும் ஒரு முறை சுட்டிக்காட்டி, “ஏட்டிக்குப் போட்டி அரசியல் நடத்த நான் தயாராக இல்லை.

இந்தச் சிறப்பு ஒதுக்கீடு சட்டம் தற்காலிகமானது என்று யார் சொன்னது என்ற வாதத்திற்குள் கூட இப்போது நான் செல்ல விரும்பவில்லை. ஏனென்றால், இது மாநிலத்தினுடைய சமூக நீதிப் பிரச்சினை; சிறப்பு இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினை. ஆகவே, இந்த சிறப்பு இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரைக்கும், சட்ட வல்லுநர்களுடன் உரிய ஆலோசனை நடத்தி, நிச்சயம் சமூக நீதி நிலைநாட்டப்படும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித ஒதுக்கீடு தொடர்பாக அறிக்கை ஒன்றினை, செய்தி ஒன்றினை நான் இங்கே படித்தேன். இன்றைக்கு உயர் நீதிமன்றத்திலே வழங்கியிருக்கக்கூடிய தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, இந்த 7.5 சதவிகித ஒதுக்கீட்டை நாங்கள் கொண்டு வந்தபோது, அறிமுகப்படுத்தியபோது, என்னென்ன தரவுகளையெல்லாம் வைத்து நாங்கள் முறைப்படுத்தினோமோ, நிச்சயமாக அதேபோன்று நாங்கள் இந்த விஷயத்திலும் நிலைநிறுத்துவோம் என்று சொல்லிக்கொள்கிறேன். அதற்கான அதிகாரம் இந்த மாபெரும் மன்றத்திற்கும், மாநில அரசுக்கும் உண்டு என்று தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.