சென்னையில் அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு, அவசரமாக அதிமுக உட்கட்சித் தேர்தல் அறிவிப்பை புதன்கிழமை வெளியிடப்பட்டது. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் வெளிநடப்பு செய்துள்ளது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் 7ம் தேதி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடந்தது. அதில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்வு செய்யப்பட்டனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி இருவரும் கூட்டாக புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஏப்ரல் 11, 16 தேதிகளில், அதிமுகவில் ஊராட்சி ஒன்றியங்கள், நகரங்கள், பேரூராட்சிகள் மற்றும் வார்டு நிர்வாகிகளுக்கான உட்கட்சித் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.
மேலும், அதிமுகவில் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான உட்கட்சிட் தேர்தல் 75 மாவட்டங்களில் ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 21 தேதிகளில் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் 5 மணி நேரம் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு, அதிமுக உட்கட்சித் தேர்தல் அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் – இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் அறிவிப்பு வெளியிட்டனர்.
அதிமுகவை கைப்பற்றும் நோக்கில் சசிகலாவின் நகர்வுகளும் ஓ.பி.எஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் நிலவும் சசிகலா ஆதரவு மனநிலையும் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், அதிமுகவின் இரட்டைத் தலைமையாக உள்ள ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இரு முகாம்களுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. கூட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒரு பிரிவினர், இந்த உட்கட்சித் தேர்தல் செயல்முறை அவசரமானது அல்ல என்றும், தேர்தல் ஆணையத்திடம் உறுதியளித்தபடி இந்த மாத இறுதிக்குள் அதிமுக உட்கட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கூறினர். மற்றொரு பிரிவினர், அதிமுகவின் முன்னாள் இடைக்கால பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா மீண்டும் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சசிகலாவை மீண்டும் சேர்ப்பது குறித்து இரு தரப்புக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. கருத்து வேறுபாடுகளால் சலசலப்பு அடைந்த கூட்டத்தில் இருந்து அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். ஆனால் சக நிர்வாகிகள் அவரை சமாதானம் செய்ததையடுத்து அவர் திரும்ப கலந்துகொண்டார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இருந்து அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர் வைத்திலிங்கம் வெளிநடப்பு செய்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“