இலங்கையில், வசதிகுறைந்த பெண்களின் சுகாதார தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்திய இலங்கை மன்றத்தினால் ஆதரவளிக்கப்பட்டு, சினிது அமைப்பினால் அமுல்படுத்தப்படும் திட்டம் ஒன்றினை அறிமுகம் செய்வதற்காக இந்திய இலங்கை மன்றம் (ISLF) 2022 ஏப்ரல் 05 ஆம் திகதி ஹோட்டல் தாஜ் சமுத்ராவில் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரும் இந்திய இலங்கை மன்றத்தின் இணைத்தலைவருமான மேன்மைதங்கிய திரு.கோபால் பாக்லே, இராஜதந்திரிகள், உலக வங்கி மற்றும் கொழும்பு திட்டம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், சினிது அமைப்பின் இணைத்தலைவர்களான Ms.ரிபா முஷ்தபா மற்றும் Ms.ஜாஷயா மொஹினுதீன், பேராசிரியர் மைத்ரீ விக்கிரமசிங்கே மற்றும் பல்வேறு அமைப்புக்களில் தலைமைப்பதவிகளிலுள்ள பெண்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
2. பெண்களின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விடயங்கள் தொடர்பாக “பெண்களுக்காக பெண்களால்” என்ற திட்டத்தை சினிது அமைப்பு முன்னெடுத்து வருகின்றது. இலங்கையிலுள்ள பெண்களில் கிட்டத்தட்ட 50 வீதமான பெண்கள் அதிக விலை காரணமாக சுகாதார அணையாடைகளை பயன்படுத்துவதில்லையென ரிபா முஷ்தபா தனது விளக்கக்காட்சி சமர்ப்பணத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவில் பத்மன் என அழைக்கப்படும் பிரபலமான டாக்டர் அருணாச்சலம் முருகானந்தம் அவர்களின் கண்டுபிடிப்பினால் கவரப்பட்ட சினிது அமைப்பு இலங்கையில் உள்ள வசதி குறைந்த பெண்களுக்காக குறைந்த செலவிலான சுகாதார அணையாடைகளை தயாரிப்பதற்காக குறைந்த செலவிலான அணையாடைகளை உற்பத்திசெய்யும் இயந்திரம் மற்றும் உற்பத்தி பொருட்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. சினிது அமைப்பினால் இவ்வாறான இயந்திரத்தை நாடு முழுவதும் உருவாக்க முடியும் என்று ரிபா முஸ்தபா தெரிவித்தார், அத்துடன் இதன் மூலம் பெண்கள், குறைந்த விலை சுகாதார அணையாடைகளை உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பை பெறுவதற்கும் உதவும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த உன்னத நோக்கத்திற்காக இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய இலங்கை மன்றத்தால் சினிது அமைப்புக்கு 500,000 இலங்கை ரூபா வழங்கப்பட்டுள்ளது..
3. இந்த நிகழ்வில் உரை நிகழ்த்திய உயர் ஸ்தானிகர் மேன்மைதங்கிய திரு.கோபால் பாக்லே அவர்கள், நாடுகளின் முன்னேற்றம் மற்றும் செழுமையில் பெண்களின் வகிபாகம் குறித்து சுட்டிக்காட்டியிருந்தார். இவ்விடயம் குறித்து இந்தியாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தினையும், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் மீதான அக்கறையுடன் இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்காக சினிது அமைப்பையும் பாராட்டிய உயர் ஸ்தானிகர், குறிப்பாக கிராமப் புறங்களில் இந்த திட்டம் குறித்து விழுப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் வலியுறுத்தியிருந்தார்.
4. 1998ஆம் ஆண்டில் இந்திய இலங்கை மன்றம் ஸ்தாபிக்கப்பட்டமை முதல் பொருளாதாரம், கல்வி, விஞ்ஞானம், தொழில்நுட்ப மற்றும் கலாசார ஒத்துழைப்பு ஆகியவற்றின் மேம்பாட்டின் ஊடாக இரு நாடுகளினதும் மக்களிடையிலான உறவை இம்மன்றம் ஊக்குவித்துவருகின்றது. மேலும், ஆக்கபூர்வமான சிந்தனைகள் மற்றும் முன்னெடுப்புக்களுக்கு ஆதரவளித்தல், அபிவிருத்தி மற்றும் செழுமைக்காக இரு நாடுகளினதும் சிவில் சமூகங்கள் மற்றும் இளைஞர்களை ஒருங்கிணைத்தல், ஆகிய விடயங்களிலும் இந்திய இலங்கை மன்றம் விசேட கவனம் செலுத்துகின்றது. இதுவரை இம்மன்றம் 150 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான 300க்கும் அதிகமான திட்டங்களுக்கு நிதி அனுசரணை வழங்கியுள்ளது, அத்துடன் ஆராய்ச்சி, கலை மற்றும் கலாசாரம், சமூகப்பணிகள், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் 20 திட்டங்களுக்கும் ஆதரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
06 ஏப்ரல் 2022