எங்கே செல்கிறது தமிழகம்? வகுப்பறையில் மதுகுடித்து கும்மாளமிட்ட கல்லூரி மாணவிகள்…

காஞ்சிபுரம்: சமீபத்தில்தான் ஓடும் பேருந்து பள்ளி மாணவிகள் பீர் குடித்து அதகளப்படுத்திய நிலையில், தற்போது கல்லூரி வகுப்பறையில் மாணவிகள் மதுகுடித்து அலப்பறையில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வைரலான நிலையில், 5 மாணவிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருப்பதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் அரசே மதுபானக்கடைகளை நடத்தி கல்லா கட்டி வருகிறது. நகரம், கிராமம் என எந்த இடத்தையும் விட்டு வைக்காமல், ஆங்காங்கே மதுபானக் கடைகளை திறந்து, தமிழக மக்களை தண்ணியடிப்பவர்களாகவே மாற்றி வருகிறது. மக்களின் மீது அக்கறையில்லாமல், வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, இன்று சிறுவர்கள் முதல் முதியோர்கள் மட்டுமின்றி, பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகளையும் குடிகாரர்களாக மாற்றி வரும் வகையில்  ஆட்சி நடத்தி வருகின்றன. ஆளும்போது ஒரு நிலைப்பாட்டிலும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது எதிர் நிலைப்பாட்டிலும் தங்களது வெட்டிப்பேச்சுக்களை வெளியிட்டு, மக்களை ஏமாற்றி வருகின்றன அரசியல் கட்சிகள்.  இந்த விஷயத்தில், தமிழ்நாட்டை ஆண்டு வந்த, ஆண்டு வரும் அதிமுக, திமுக இரு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

கடந்த காலங்களில் கடுமையான வேலைகளை செய்யும் உழைப்பாளிகள்தான், தங்களது உடல்வலி தெரியாதவாறு, இரவில் மது குடித்து வந்தனர். ஆனால், தற்போது மது குடிப்பது என்பது பாஷனாக மாறி விட்டது. அதுவும் ஐடி நிறுவனங்கள் வந்தபிறகு, கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் இளைய தலைமுறையினரிடையே மது குடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றும் பல ஆயிரம் இளைஞர்கள் இளைஞிகளுக்கு, கடுமையான வேலைப்பழுவை கொடுத்து, அவர்களை சிந்திக்க விடாமல், சிறைபிடித்து, வார இறுதி நாளில் ரிலாக்ஸ் பார்ட்டி என்று கூறி, ஆண், பெண் பேதமின்றி, அனைவருக்கும் ஆடல் பாடலுடன் மது பார்ட்டிகளை வைத்து இளைய சமுதாயத்தையே குடிகாரர்களாக மாற்றி வருகின்றனர்.

மதுகுடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகளால், மருத்துவ மனை, மறுவாழ்வு மய்யங்களில் அனுமதிக்கப்படும் போதை நோயாளிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.  தமிழகத்தில் அதிகரித்து வரும் குடிப்பழக்கம், மக்களின் உடல் மற்றும் சமூக நலத்தை பாதிப்பதாக கூறி பல அமைப்புகள் பூரண மதுவிலக்கு கோரி அவ்வப்போது போராட்டங்களை நடத்திவருகின்றன. இருந்தாலும் அரசுகள் அதை கண்டுகொள்வது இல்லை.

அதன் எதிரொலி இன்று இளைய சமுதாயத்தினரிடையே  (ஆண்கள், பெண்கள்) மதுகுடிப்பது என்பதுஒரு பேஷனாகவே உள்ளது. இந்த பேஷன் இன்று சிறுவர்களிடமும் தொற்றிக் கொண்டுள்ளது. இதன் பாதிப்பு, சமீப காலமாக தமிழ்நாட்டில் அதிகரித்து பாலியல் வழக்குகள், புகார்கள் என்பதை மறுக்க முடியாது.

இவ்வாறான சூழலில்தான் சமீப காலமாக தமிழ்நாட்டில் பள்ளி மாணவிகளும், கல்லூரி மாணவிகளும் ஓப்பனாக மது குடிக்கும் கலாச்சாரம் உருவாகி உள்ளது. தமிழகத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை உள்ளிட்ட பல  குற்றச் சம்பவங்களுக்கு மதுவும் ஒரு முக்கிய காரணம். தமிழகத்தில் நடைபெற்ற குற்றநிகழ்வு கள் பெரும்பாலும் குடிபோதையில்தான் நடைபெறுகின்றன என்பது ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

இந்த சூழலில் தற்பேது பள்ளி மாணவிகளும் மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல்கள் பரவி வருகின்றன.  கடந்த மார்ச் மாதம் இறுதியில்தான், செங்கல்பட்டு அருகே அரசுப் பள்ளி சீருடையில் உள்ள மாணவிகள் சிலர் பேருந்திலேயே மது அருந்தும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தற்போது  காஞ்சிபுரத்தில் வகுப்பறையில் அமர்ந்து கல்லூரி மாணவிகள் குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து குடித்தது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி மேலும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்வேறு பகுதியிலிருந்து படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவிகள் வகுப்பறை மேஜையில் அமர்ந்து மதுவை குளிர்பானத்துடன் கலந்து குடிக்கும் வீடியோ இணையத்தை வலம் வந்துகொண்டிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த மாணவிகளை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டிஜிட்டல் வளர்ச்சியை முறையாக பயன்படுத்தாக இளைய தலைமுறையினர், ஒருபுறம்  தவறான பாதையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் நிலையில்,  தமிழகஅரசு விற்பனை செய்யும் டாஸ்மாக் மற்றொருபுறம்,  ஆண், பெண் பேதமின்றி கோடிக்கணக்கானோரை மதுவுக்கு அடிமையாக்கி வருகிறது. இதன் எதிரொலிதான் தற்போது  பேருந்துகளிலும், கல்லூரி வகுப்பறைகளிலும் மாணவிகள் மது குடிக்கும் நிகழ்வுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால், மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, அவர்களை பாலியல் ரீதியிலான தவறான பாதைக்கு அழைத்து செல்லும் அவலம் உருவாகும் என்பதையும் மறந்து விட முடியாது.

மது, ஒரு தனிப்பட்ட மனிதரை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த குடும்பத்தையும் சமூகத்தையுமே அழிக்கும் சக்திவாய்ந்தது; தமிழகத்தில் குடிப்பழக்கம் வயது வித்தியாசம் இன்றி பரவி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழர்களுக்கு ‘பண்பாடு , ஒழுக்கம் இரு கண்களைப் போன்றது இவ்விரண்டையும் நாம் கடைப்பிடித்தால் சமூகத்தில் சிறந்த மனிதராக வர முடியும் என்று ஆன்றோர்கள் கூறியுள்ளனர். ஆனால், தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகள், தமிழகம் எங்கே செல்கிறது, தமிழர்கள் எதைநோக்கி பயணிக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியாத சூழலே எழுந்துள்ளது.

மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும், போதை தரும் அனைத்துப் பொருட்களையும் அரசு தடை செய்ய வேண்டும். அரசு என்றால் மக்களை நலமாக வாழ வைக்க வேண்டும். வருமானம் மட்டுமே குறிக்கோளாக இருக்கக் கூடாது.  தமிழகஅரசு இதுபோன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சாமானிய மக்களின் வேண்டு கோளாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.