மேற்பார்வை குழுவின் முடிவே இறுதியானது முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது பற்றி எதுவும் பேசக் கூடாது: கேரளாவுக்கு அதிரடி உத்தரவு; உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மேற்பார்வை குழு எடுக்கும் முடிவே இறுதியானது என திட்டவட்டமாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், புதிய அணை கட்டுவது பற்றி இப்போது எதுவும் பேசக்கூடாது என்று கேரள அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், இம்மாநில அரசு முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் நிராகரித்து விட்டது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘தேசிய அணைகள் பாதுகாப்பு சட்டம்’ நடைமுறைக்கு வர ஒரு வருடத்துக்கும் மேலாகும் என ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது கேரள அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குப்தா, ‘‘தேசிய அணைகள் பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு வர ஓராண்டாகும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், அதனை 60 நாட்களில் நடைமுறைப்படுத்த முடியும். அதனால், இந்த விவகாரத்தில் ஒரு காலக்கெடுவை நீதிமன்றம் நிர்ணயம் செய்ய வேண்டும். அதேபோன்று அணை விவகாரத்தில் மேற்பார்வை குழுவின் தலைமை பொறுப்பை தேசிய நதி நீர் ஆணையத்தின் தலைவரே ஏற்க வேண்டும்,’ என தெரிவித்தார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உமாபதி, வழக்கறிஞர் குமணன் ஆகியோர், ‘‘இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள், மேற்பார்வை குழுவின் பரிந்துரைகள் ஆகியவற்றை கேரள அரசு கருத்தில் கொள்ளாமல் அதனை பின்பற்ற மறுக்கிறது. மேலும், அணையின் பாதுகாப்பு குறித்த விவகாரத்தில் மேற்பார்வை குழுவின் அதிகாரத்தை மேம்படுத்த எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர்கள் அணையின் பாதுகாப்பை சோதிக்கட்டும். ஆனால், 2006, 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அணையில் நாங்கள் செய்ய வேண்டிய நிலுவை பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும். இதையடுத்து தான், அணையின் பாதுகாப்பை சோதிக்க வேண்டும். ஆனால், அணையில் இருக்கும் நிலுவை பணியை செய்ய கேரளா தொடர்ந்து முட்டுகட்டையாக இருந்து வருகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலத்தின் போதும் கேரளா தொடர்ந்து அணையின் பாதுக்காப்பை கேள்விக்குள்ளாக்கி பிரச்னையை எழுப்பி வருகிறது. மேற்பார்வை குழு எங்களுக்கான பணிகளை செய்ய முழுமையாக அனுமதித்துள்ளது,’ என தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதி கன்வீல்கர், ‘பிறகு ஏன் அணையில் பணிகள் நிலுவையில் உள்ளது. அதனை செய்து முடிக்க வேண்டியது தானே?’ என கேள்வி எழுப்பினார். அதற்கு, ‘அதனை செய்ய விடாமல்தான் கேரள அரசு தொடர்ந்து தடுத்து வருகிறது,’ என தமிழக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஐஸ்வர்யா பட்டி, ‘‘முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தற்போதைய தலைவர் குல்சன் ராஜ் அவர்களே மேற்பார்வை குழுவின் தலைவராக இருக்கலாம். அதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது,’ என தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் பிடிவாதம் பிடிப்பது ஏன் என்று புரியவில்லை. இந்த விஷயத்தை தமிழகம், கேரளா மாநிலங்கள் சிக்கலாக்க வேண்டாம். முதலில் மேற்பார்வை குழுவின் அதிகாரத்தை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்துங்கள். புதிய அணை கட்டுவது பற்றி இப்போது யாரும் பேச வேண்டாம். மேற்பார்வை குழு எங்களால் அமைக்கப்பட்டது. அதன் செயல்பாடுகள் குறித்து யாரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது. இருப்பினும், திடீரென வரும் இயற்கை பேரழிவுகளை யாராலும் தடுக்க முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மையாகும். மேலும், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மிக முக்கியம். குறிப்பாக, அணையின் பாதுகாப்பு குறித்து நாங்கள் பேசுகிறோம், ஆனால், கேரளா அரசு மேற்பார்வை குழுவின் மாற்றங்கள் குறித்து மட்டுமே பேசி வருகிறது. அதுபோன்ற சூழல் தற்போது கண்டிப்பாக கிடையாது. அதனால், அதுசார்ந்த கேரள தரப்பின் அனைத்து கோரிக்கைகளையும் நிராகரிக்கிறோம். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மேற்பார்வை குழு எடுக்கும் முடிவே இறுதியானது. இந்த வழக்கில் நாளை (இன்று) விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறினர்.* நீதிபதி கடுங்கோபம் கேரளா வழக்கறிஞர் வெளியேற உத்தரவுமுல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் கேரளாவை சார்ந்த இடையீட்டு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நெடும்பாரா, அணையின் மேற்பார்வை குழு, அது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் மீது கடுமையான முறையில் வாதங்களை முன்வைத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி கன்வீல்கர், ‘‘உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகள் எங்களுக்கு தேவையில்லை. இந்த விவகாரத்தில் என்ன செய்ய வேண்டும் என எங்களுக்கு தெரியும். அதனால், முதலில் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறுங்கள்,’ என கடும் கோபத்துடன் உத்தரவிடடார். இதையடுத்து, வழக்கறிஞர் நெடும்பாரா உடனடியாக விசாரணை அறையில் இருந்து வெளியேறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.