சிறுபோக பயிர்ச்செய்கை ஊடாக நமக்குத் தேவையான அரிசியை நாமே பெற்றுக்கொள்ள வேண்டும்

நாட்டில் தற்போது நிலவக் கூடிய நிலைமையை கருத்தில் கொண்டு சிறுபோக பயிர்ச்செய்கையை மேற்கொள்வதன் மூலம் தமக்குத் தேவையான அரிசியை தாமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட அல்லை வியாபார சிறுபோக பயிர்ச்செய்கை கூட்டம் நேற்று சேருவில பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போது சிறுபோக விவசாய செய்கையை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பி;டார்

அரசாங்கம் தற்போது சேதன விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு விவசாய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.  
தற்போது சிறுபோகத்திற்கு அவசியமான சேதன கூட்டு, திரவ  பசளைகள்  கமநல அபிவிருத்தித் திணைக்களம் மூலமாக விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
அதேபோன்று தேவையான நீர்ப்பாசன விநியோக முறையை கிரமமாக மேற்கொள்ள நீர்ப்பாசன திணைக்களம் உறுதிபூண்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இம் முறை சிறுபோகத்தில் 25,000 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட உள்ளது. கடந்த பெரும்போகத்தில்  48 வீதமான அறுவடையே கிடைக்கப்பெற்றது.
 
ஏற்கனவே நடைபெற்ற சிறுபோக முன் ஆயத்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன அந்த கூட்டத் தீர்மானங்களை அவ்வாறே செயற்படுத்த இன்றைய கூட்டத்தில் விவசாயிகளால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதற்கிணங்க எதிர்வருகின்ற 20ஆம் திகதி சிறு போக பயிர்ச்செய்கைக்கான நீர் விநியோக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். மூன்று தொடக்கம் மூன்றரை மாதங்கள் வரையிலான விதை நெல்லை பயன்படுத்துவது சிறந்ததாகும். எனவே குறித்த தீர்மானங்களை விவசாயிகள் பின்பற்றி செயற்படுமாறு சேருவில பிரதேச செயலாளர் பி.ஆர். ஜயரத்ன இதன்போது விவசாயிகளிடம் தெரிவித்தார்.

உழவு இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு ஒழுங்குபடுத்தப்பட்ட முறை ஒன்றை ஏற்படுத்துமாறும் விவசாய நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து எரிபொருள் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
 
அதற்கு பதிலளித்த சேருவில பிரதேச செயலாளர் விவசாயிகளுடைய விதைப்பு நடவடிக்கைகளை கவனத்திற்கொண்டு விதைப்பு நடவடிக்கை இடம்பெறுகின்ற காலப்பகுதியில் கிடைக்கப் பெறுகின்ற எரிபொருளில் கூடிய அளவு எரிபொருளை விவசாயிகளுக்கு வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு எரிபொருள் நிரப்பு நிலைய முகாமைத்துவத்திற்கு அறிவுறை வழங்குவதாகவும், விவசாய சங்கங்கள் சிறு போகத்தில் ஈடுபடக்கூடிய விவசாயிகளுடைய பெயர், மேற்கொள்ளும் ஏக்கரின் அளவு தொடர்பான விவரங்களை தமக்கு தெரியப்படுத்துமாறு இதன் போது சேருவில பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த தேசிய உரக் கூட்டுத்தாபனத்தின் உதவிப் பணிப்பாளர் டபிள்யு.ஜி.எஸ். பிரேமரத்ன இம்முறை சிறுபோகத்தில் திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 28605 ஹெக்டயர் பரப்பளவில் நெல் விவசாயம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவற்றுக்குத் தேவையான பசளை தேவைப்பாடு குறித்து உரிய  அமைச்சுக்கு முன்னரே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

திருகோணமலை மாவட்டத்தில் சிறுபோகத்தில் உரிய பசளைகளை விநியோகிப்பதற்காக நான்கு நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் விவசாய காப்புறுதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும், விவசாயிகளின்  பல்வேறுபட்ட பிரச்சினைகள் என்பன தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.