டெல்லி: வங்கிகளின் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) எந்த மாற்றமும் இன்றி 4 சதவீதமாகவே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், 11வது முறையாக வட்டி விகிதங்களில் ரிசர்வ் வங்கி மாற்றம் எதுவும் செய்யவில்லை. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகனங்களுக்கான கடன் விகிதத்திலும் மாற்றம் இருக்காது. வங்கிகள் வைத்துள்ள வைப்புத்தொகைக்கு ஆர்.பி.ஐ. தரும் ரிசர்வ் ரெப்போ வட்டி 3.35 சதவீதத்தில் இருந்து 3.75 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டார். ரஷ்யா – உக்ரைன் போரால் பணவீக்க விகிதம் 5.7 சதவீதம் ஆக உயரக்கூடும். பணவீக்கம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என்றும் கூறினார். இந்த நிதியாண்டில் பணவீக்கம் 5.7 சதவீதமாக உயரும்; முன்பு பணவீக்கம் 4.5 சதவீதமாக இருக்கும் என ஆர்.பி.ஐ தெரிவித்தது. பணவீக்கம் அதிகரித்து வருவதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறையும் எனவும் குறிப்பிட்டார். 2022-23 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதம் ஆக இருக்கும். ஏற்கனவே பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம் ஆக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் 0.6 சதவீதம் வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போர் பல புதிய சிக்கல்களை உருவாக்கியுள்ளதால் நாட்டின் பணவீக்கம் அதிகரிக்க காரணம் என்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.