சென்னையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று சென்ட்ரல், எம்.ஜி.ஆர் ரயில் நிலையம்.
தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் தமிழகம் வருபவர்களில் நுழைவு வாயிலாக இந்த ரயில் நிலையம் இருக்கிறது. எனவே சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மக்கள் கூட்டத்திற்கு எப்போதும் பஞ்சமில்லை. இங்கு நிலவும் ஜன நெருக்கடிக்கு இளைப்பாறுதல் தரும் விதமாக அழகான பூங்காவை தமிழக அரசு அமைத்திருக்கிறது.
வண்ண விளக்குகளைக் கொண்ட அழகிய நீரூற்றுகள் , பல்வேறு அழகு தாவரங்கள், அங்கு வருகைபுரியும் மக்கள் இளைப்பாறுவதற்கு இருக்கை வசதிகளுடன், சென்னையின் மத்திய சதுக்கம் திறக்கப்பட்டுள்ளது. பல லட்சப் பயணிகள் வந்து செல்லும் பரபரப்பான சந்திப்புகளின் ஒன்றான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்வசதியை உருவாக்கியுள்ளார்.
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ரிப்பன் கட்டிடம், புறநகர் பேருந்து நிலையம், புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில், ₹400 கோடி செலவில் மத்திய சதுக்கம் அமைக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக அந்த இடத்தை அழகுபடுத்தவும் புதுப்பிக்கவும் நடைபாதை மற்றும் பிளாசா ஆகியவை முடிக்கப்பட்டுள்ளன. ரிப்பன் பில்டிங்ஸ் மற்றும் விக்டோரியா ஹால் முன்புறம் உள்ள காலி இடங்களில் செடிகள் மற்றும் புல்தரை உருவாக்கி மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ரூபாய் 34.22 கோடிக்கு நில மேம்பாட்டு வசதிகள், சுரங்க நடைபாதைக்கான வசதி மேம்படுத்தும் பணி நடைபெற்று வந்தன. பணிகள் முடிவடைந்த நிலையில் மக்களுக்கு கண்ணை கவரும் அடுத்த இளைப்பாறும் தலமாக இருக்கும் மத்திய சதுக்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இங்கு 500 கார்கள், 1500 இருசக்கர வாகனங்கள் ஆகியவை நிறுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்று வர க்ரானைட் கற்கள் பாதிக்கப்பட்ட நடைபாதைகள், நடைபாதையை ஒட்டி வண்ண விளக்குகள், க்ரானைட் இருக்கைகள், நடைபாதையில் டென்சைல் கானோபி வடிவத்தில் கூரைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லி நெடுஞ்சாலை பல்லவன் சாலை சந்திப்பிற்கும் இடையே மக்கள் பாதுகாப்பாக நடந்துசெல்லும் வகையில் சுரங்க பாதையும், மக்கள் பயணத்தை எளிதாக்கும் விதமாக மின்தூக்கிகளும், நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை மக்களும் சென்னைக்கு வரும் பயணிகளும் இந்த பூங்காவை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பயன்படுத்தி மகிழலாம்.