டோக்கியோ: ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் அளவு படிப்படியாகக் குறைக்கப்படும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக் காரணமாக, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளன. இதன் காரணமாக ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் உரங்ககள் இறக்குமதி செய்வது பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரஷ்யாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவது படிப்படியாக குறைக்கப்படும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜப்பான் வர்த்தக துறை அமைச்சர் கொய்ச்சி ஹகியுடா கூறும்போது, “ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை காரணமாக அந்நாட்டிடமிருந்து படிப்படியாக நிலக்கரி இறக்குமதி செய்வதை குறைக்க உள்ளோம். மாற்று முறையில் நிலக்கரி இறக்குமதி செய்ய வழிகள் தேடி வருகிறோம்” என்று தெரிவித்தார்.
நிலக்கரியை உலக அளவில் அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஜப்பான் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஜப்பான் நாட்டிற்கு 2021 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரி ஏற்றுமதி செய்வதில் ரஷ்யா முக்கிய பங்கு வகித்தது.
உக்ரைனில் ஒன்றரை மாதங்களாக ரஷ்யா தாக்குதல் நடந்து வரும் நிலையில், ரஷ்யாவை போரை நிறுத்தும்படி உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் தான் உக்ரைனின் புக்கா நகரப் படுகொலை சர்வதேச கவனத்தை ஈர்த்தது. கைகள் கட்டப்பட்டு, நெற்றியிலும், நெஞ்சிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த சடலங்கள் புக்கா நகரில் இருந்து மீட்கப்பட்டன. இதற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. பல வகையிலும் நெருக்கடிகளை சந்தித்து வரும் ரஷ்யாவுக்கு ஜப்பானின் இந்த முடிவு புதிய நெருக்கடியாக அமைந்துள்ளது.