சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரி மற்றும் பசுமைத் தாயகம் இணைந்து நடத்திய ‘காலநிலை அவசரநிலை மற்றும் செயல் திட்டம்’ என்ற கருத்தரங்கில், புவி வெப்பமாகி கடல் மட்டம் உயர்ந்தால் 15 ஆண்டுகளில் மயிலாப்பூர் கடலாக மாறும் அபாயம் உள்ளது என்று சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
பாமக இளைஞரணி செயலாளரும் ராஜ்ய சபா எம்.பி.-யுமான அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி. இவர் பசுமையத் தாயகம் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவராக உள்ளார். மேலும், பசுமைத் தாயகம் என்ற சுற்றுச்சூழல் இதழின் ஆசிரியராகவும் உள்ளார்.
சௌமியா அன்புமணி தொடர்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு, மரம் வளர்த்தல் உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள ராணி மேரிக் கல்லூரியும் பசுமைத் தாயகமும் இணைந்து, ‘காலநிலை அவசரநிலை மற்றும் செயல் திட்டம்’ என்ற கருத்தரங்கத்தை ராணி மேரி கல்லூரி வளாகத்தில் நடத்தின.
இந்த கருத்தரங்கில், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் டாக்டர் சௌமியா அன்புமணி கலந்து கொண்டு பேசியதாவது:
இன்றைய காலத்தில் ஒவ்வொருவரும் தங்களுக்கு என தனி வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அதிக அளவில் கார்பன் டையாக்சைடு வெளியேறுகிறது. இதனால், காற்று மிக கடுமையாக மாசடைகிறது. புவி வெப்பம் அடைகிறது.
புவி வெப்பமாகி கடல் மட்டம் உயர்வதால், உலகம் தற்போது எட்டியுள்ள புவி வெப்பத்தைவிட மேலும் வெப்பநிலை அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது. கடல் மட்டம் உயர்வதால் அடுத்த 30 ஆண்டிற்குள் மாலத்தீவு என்ற தீவு முற்றிலும் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.
அதேபோல, புவி வெப்பம் அதிகரித்து கடல் மட்டம் உயர்ந்தால், இன்னும் 15 ஆண்டுகளில் நாம் தற்போது நிற்கும் மயிலாப்பூர் பகுதி கடலாக மாறும் அபாயமும் உள்ளது. அதனால், கடலோரத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும்” என்று எச்சரித்தார்.
தொடர்ந்து பேசிய சௌமியா அன்புமணி, “2 ஆண்டுகளில் தமிழகம் மட்டுமல்லாமல் அனைத்து நாடுகளிலும் வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரழிவு நிகழ்வுகள் நடைபெற்று உள்ளது. இதற்கெல்லாம் காலநிலை மாற்றம் மட்டுமே காரணம். முந்தைய காலத்தில் 8 அடியில் நிலத்தடி நீர் கிடைத்த பகுதிகளில் தற்போது 800 அடிக்கு தண்ணீர் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு காரணம் நிலத்தடி நீர் பற்றாக்குறை மற்றும் புவி வெப்பமும் தான். காலம் தாழ்த்தாமல் உடனடியாக காலநிலை அவசரநிலையை அமல்படுத்த வேண்டும்.” என்று கூறினார்.
மேலும், அனைவரும் ஒரு முறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் வாழ்க்கை முறையை முற்றிலுமாக நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். நிலக்கரி, பெட்ரோல்-டீசல் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்தவேண்டும் என்று சௌமியா அன்புமணி வேண்டுகோள் விடுத்தார்.
“அனைவரும் சோலார் போன்ற மாற்று வழியை உருவாக்கி பயன்படுத்த வேண்டும். அண்டை நாடுகளில் பொது போக்குவரத்தை மட்டுமே மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதே நிலையை இங்கும் நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதினால் காற்று மாசு குறைந்து புவி வெப்பமும் குறைவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. காலநிலை மாற்றம் மட்டுமல்லாமல் மாணவர்களாகிய நீங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு தீய வழிகளை தகர்த்து, போதை பழக்கங்களுக்கு அடிமையாகாமல் அனைவரும் நல்வழியில் வாழ்க்கை பயணத்தை தொடர வேண்டும்.” என்று சௌமியா அன்புமணி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“