வாஷிங்டன்; அமெரிக்காவில் அதிபருக்கு பாதுகாப்பு அளிக்கும் ரகசிய போலீஸ் மற்றும் உளவுத்துறையில் ஊடுருவிய பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்புடைய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாஷிங்டன்னில், அரியன் தஹெர்ஜடேஹ்(40) மற்றும் ஹெய்தர் அலி(35) ஆகியோரை கைது செய்த எப்பிஐ அதிகாரிகள் அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரகசிய போலீசில் பணியாற்றிய 4 பேர் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொலம்பியாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, ஹெய்தர் அலி, தனக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமைப்புடன் தொடர்பு உள்ளதாக கூறியுள்ளார் என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். பாகிஸ்தான் மற்றும் ஈரானில் நாடுகளில் வழங்கப்பட்ட பல விசாக்கள் வைத்திருந்தார் எனவும் கூறினார்.
மேலும் வழக்கறிஞர் கூறியதாவது: ஹெய்தர் அலி மற்றும் அரியன் தஹெர்ஜடேஹ் இருவரும் உள்நாட்டு பாதுகாப்பு துறையுடன், தவறான மற்றும் மோசடியான தொடர்பை பயன்படுத்தி தாங்கள் பாதுகாப்பு துறையில் பணியாற்றுவதை போல் காட்ட முயற்சித்துள்ளனர்.
குறிப்பாக அரியன் தஹெர்ஜடேஹ், அமெரிக்க ரகசிய போலீஸ் உறுப்பினர்கள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறையில் பணியாற்றுபவர்களுக்கு வாடகை இல்லாமல் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு, ஐபோன், கண்காணிப்பு அமைப்பு, டுரோன், டிவி மற்றும் ரைபிள் வைக்கும் சாதனங்கள், ஜெனரேட்டர் ஆகியவற்றை இலவசமாக வழங்கி உள்ளார். மேலும் அரசு வாகனம் எனக்கூறி, வாகனங்களையும் வழங்கி உள்ளார்.
மேலும் அதிபரின் மனைவிக்கு பாதுகாப்பு அளிக்கும் அதிகாரிகளுக்கு 2 ஆயிரம் டாலர் மதிப்புள்ள துப்பாக்கிகளையும் வாங்கி தர முன் வந்துள்ளார். விசாரணையில் இது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மேலும் 4 பேர் கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர் எனக்கூறினார்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்படி, தஹெர்ஜடேஹ் மற்றும் ஹெய்தர் அலி இருவரும், வாஷிங்டன்னில் தாங்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பல இடங்களில் வீடியோ பொருத்தி கண்காணித்துள்ளனர். அங்கு வசித்தவர்களின் தொலைபேசியை கண்காணித்து வந்த இருவரும், அவர்கள் குறித்த அனைத்து தகவல்களையும் சேகரித்து வைத்துள்ளனர்.
அங்கு குடியிருந்த எப்பிஐ, அமெரிக்க உளவுப்போலீஸ், உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள், கடற்படை மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு பரிசுகள் மற்றும் விருப்பமானவற்றை வாங்கி கொடுத்துள்ளனர். அதிகாரி ஒருவரின் மனைவிக்கு அரசு வாகனம் எனக்கூறி தனது வாகனத்தை பயன்படுத்தி கொள்ள அனுமதித்ததுடன், ஜெனரேட்டரை வழங்கி உள்ளார். வெள்ளை மாளிகையுடன் தொடர்புடைய ரகசிய போலீஸ் ஒருவருக்கு 48,200 டாலர் வாடகை அளிக்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்பை ஒரு ஆண்டிற்கு இலவசமாக தங்க அனுமதித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அவர்களை காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.