கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக தீவு நாடான இலங்கை அதில் இருந்து மீள முடியாமல் தத்தளித்து வருகிறது. விலைவாசிகள் அனைத்தும் விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டன. பெட்ரோல், டீசல், மண்எண்ணை மற்றும் உணவு பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அல்லாடி வருகின்றனர்.
பொதுமக்களின் கோபபார்வை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் மீது திரும்பி உள்ளது. பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். நிலைமையை சமாளிக்க புதிய அமைச்சர்கள் பதவியேற்றபோதும், அவர்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் திணறி வருகிறார்கள். 3 முறை பாராளுமன்றம் கூடியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
இலங்கையில் தற்போது கடுமையாக அரசியல் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டங்களும் தற்போதைய நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது.
அதிபர், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் வீடுகளையும் அவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். குருணாகலில் உள்ள அமைச்சர் ஜோன்ஸ் பெர்னாண்டோ வீட்டை முற்றுகையிடுவதற்காக பொதுமக்கள் திரண்டு சென்றனர்.
அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் அங்கு வைத்து இருந்த தடுப்புகளை அகற்றி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவும் இந்த போராட்டம் நீடித்தது.
இதனால் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பொதுமக்கள் பிடியில் சிக்கினால் எங்கே அவர்கள் தன்னை தாக்கி விடுவார்களோ என பயந்தார். இதையடுத்து அவர் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். அவர் அங்கிருந்து தலைதெறிக்க தப்பி ஓடி கொழும்பில் உள்ள அவருக்கு சொந்தமான ஒரு ஓட்டலில் மறைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவரை போல மற்ற அமைச்சர்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டல்களில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
நாளுக்குநாள் இலங்கையில் நிலைமை மோசமடைந்து வருவதால் பல பொருட்களுக்கு அங்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அவசர தேவைக்கு மருந்து பொருட்கள் கூட கிடைக்காமல் பொது மக்கள் தவித்து வருகிறார்கள்.
இதையும் படியுங்கள்..
அடுத்த வாரம் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தலாம்- அமெரிக்கா தகவல்