“முஸ்லிம் பெண்களை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்வேன்” என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்த சாமியார் மீது 6 நாட்களுக்கு பின் வழக்குப்பதிவு செய்துள்ளனர் உத்தரப்பிரதேச மாநில போலீசார்.
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து மத சாமியார் ஒருவர் ஜீப்பில் இருந்தவாறு பொதுமக்கள் இடையே உரை நிகழ்த்தினார். அப்போது சீதாபூரில் உள்ள மசூதிக்கு அருகே ஜீப் சென்ற போது, “இந்தப் பகுதியில் எந்த இந்து பெண்களுக்காவது முஸ்லிம்கள் தொல்லை கொடுத்தால், இஸ்லாமிய பெண்களை கடத்திச் சென்று பொதுவெளியில் வைத்து அவர்களை பாலியல் வன்புணர்வு செய்வேன்” என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். அவர் இவ்வாறு கூறியதும், அங்கிருந்த பெரும்பாலான மக்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷமிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் எழுந்தது. பின்னர், போலீஸார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில், வெறுப்புணர்வை ஊட்டும் வகையில் பேசிய சாமியார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ‘அல்ட் நியூஸ்’ என்ற செய்தி வலைதளத்தின் துணை நிறுவனர் முகமது ஜுபைர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அந்த சாமியார் பேசிய வீடியோவை முகமது ஜூபைர் சமூக வலைதளத்தில் இன்று வெளியிட்டார்.
இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி பெரும்பாலானோரின் கண்டனத்துக்கும், விமர்சனத்துக்கும் உள்ளாகி வருகிறது. இதனிடையே, இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாகவும், சாமியார் பேசியது உண்மை என தெரியவந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் சீதாபூர் போலீஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய சாமியார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆறு நாட்களுக்குப் பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரம் தொடர்பாக தனது கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு சர்ச்சைக் கருத்தை தெரிவித்த சாமியாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க: பத்திரிகையாளரை மருத்துவமனையில் சங்கிலியால் கட்டிவைத்த போலீசார் – என்ன நடந்தது?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM