கீவ்: கிழக்கு உக்ரைனில் உள்ள ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 8, 2022) ரஷ்ய படைகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்காக பொதுமக்கள் ரயில் நிலையத்தில் காத்திருந்ததாக மாநில ரயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யப் படைகளால் குண்டுவீச்சுக்கு உள்ளான பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கிராமடோர்ஸ்க் நகரில் உள்ள ஒரு ரயில் நிலையத்தை இரண்டு ரஷ்ய ராக்கெட்டுகள் தாக்கியதாக அந்த நிறுவனம் கூறியது.
“கிராமடோர்ஸ்க் ரயில் நிலையத்தை இரண்டு ராக்கெட்டுகள் தாக்கின” என்று உக்ரைன் ரயில்வே ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“செயல்பாட்டு தரவுகளின்படி, கிராமடோர்ஸ்க் ரயில் நிலையத்தில் நடந்த ராக்கெட் தாக்குதலில், 30 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் .” என அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | அமெரிக்காவின் முதல் கறுப்பினப் பெண் நீதிபதி!
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் இந்த தகவலை சரிபார்க்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் மற்றும் பலி எண்ணிக்கை குறித்து ரஷ்யா உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. பிப்ரவரி 24 அன்று உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து பொதுமக்களை குறிவைப்பதை மாஸ்கோ தொடர்ந்து மறுத்துள்ளது.
உக்ரேனிய ரயில்வேயின் தலைவரின் கூற்றுப்படி, ரயில் தடத்தில் நடந்த வான்வழித் தாக்குதலுக்கு பிறகு, அதே பகுதியில், வெளியேறும் மக்களை ஏற்றிச்சென்ற மூன்று ரயில்கள் தடுக்கப்பட்டன என உக்ரேனிய ரயில்வே தலைவர் கூறியுள்ளார்.
உக்ரைனிய அதிகாரிகள் ரஷ்யப் படைகள் ஒரு புதிய தாக்குதலுக்கு மீண்டும் குழுமி வருவதாகவும், உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் முடிந்த வரை அதிகப்படியான பகுதிகளை தன்வசப்படுத்த முயற்சித்து வருவதாகவும் கூறியுள்ளனர். டான்பாஸ் என அழைக்கப்படும் இப்பகுதி ரஷ்யாவின் எல்லையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சில பகுதிகளில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் பொதுமக்களை வெளியேறுமாறு வலியுறுத்தி வருகின்றனர். பாதுகாப்பான இடங்களுக்கு பிரயாணிப்பது பாதுகாப்பானதாகத் தான் உள்ளது என அதிகாரிகள் கூறினாலும், அவ்வப்போது நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள் மக்கள் மனதில் பீதியைக் கிளப்புகின்றன.
மேலும் படிக்க | UNHRCஇல் ரஷ்யா சஸ்பெண்ட்! இந்தியா வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளாதது ஏன்?