சென்னை:
சென்னை மாநகராட்சி பட்ஜெட் நாளை (9-ந்தேதி) மன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
இதற்கான மன்ற கூட்டம் 10 மணிக்கு ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூட்டரங்கில் நடக்கிறது. மேயர் பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார் ஆகியோர் தலைமையிலும், கமிஷனர் ககன்தீப்சிங் பேடி முன்னிலையிலும் 2022-23-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வரிவிதிப்பு நிலைக்குழு தலைவர் சர்ப ஜெயதாஸ் தாக்கல் செய்கிறார். அவர் நிதிநிலை அறிக்கையை முழுவதுமாக படித்து முடிப்பார்.
பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகளை மேயர் பிரியா வெளியிடுகிறார்.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் 6 ஆண்டுகளுக்கு பிறகு நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெறுகின்றன.
குறிப்பாக சிங்கார சென்னை திட்டத்திற்கு அரசு ஒதுக்கிய நிதியில் இருந்து நகரை அழகுப்படுத்த தேவையான பணிகளும் அதற்கான நிதியும் ஒதுக்கப்படுகிறது.
வெளிநாட்டினரையும், பிற மாநிலத்தவரும் சென்னை பெருநகருக்குள் நுழையும் போது கவரக்கூடிய வகையில் ஓவியங்கள், தமிழர்களின் சிறப்புகளை விளக்கும் படைப்புகள் இடம் பெறுவது, பொது இடங்களை அழகுபடுத்துதல், பசுமை மற்றும் தூய்மை நகரமாக மாற்றுதலுக்கான பணிகளுக்கு முக்கியம் கொடுக்கப்படும்.
இதே போல பருவமழை காலத்தில் சென்னையில் மழை நீர் தேங்கி வெள்ள பாதிப்பை ஏற்படுத்தாமல் நிரந்தர தீர்வுகாண அடிப்படையான வடிகால் கட்டமைப்புகளை ஏற்படுத்தி பாதுகாக்க நடவடிக்கை, தரமான சாலைகள், பொது சுகாதாரம், குப்பை, கொசுவில்லா நகரமாக மாற்றுதல் போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம், மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை விரைவுப்படுத்துதல், பாரம்பரிய கட்டிடங்களை பராமரித்தல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
சுமார் 3 ஆயிரம் கோடி மதிப்பிற்கு வரவு-செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 50 பக்கங்கள் கொண்டதாக மாநகராட்சி பட்ஜெட் இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக அதிகாரிகள் பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. சில முக்கிய திட்டப்பணிகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்குதல் போன்ற இறுதி கட்டப்பணிகளுடன் இன்று பட்ஜெட் தயாரிப்பு இறுதி செய்யப்பட்டு அச்சடிக்கப்படுகிறது.