பெங்களூரு,-அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி, அரசு மற்றும் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும், உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவின் துறை மாற்றப்படும் என கூறப்படுகிறது.பெங்களூரின் கவுரிபாளையாவில் சந்துரு என்ற இளைஞர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டார். சம்பவத்தை சரியாக தெரிந்து கொள்ளாமல் உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, சர்ச்சைக்குரிய வகையில் கூறினார்.இது கட்சிக்கும், அரசுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இதையே அஸ்திரமாக பயன்படுத்தி, எதிர்க்கட்சிகள் அரசுக்கு குடைச்சல் கொடுக்கின்றன.முந்தைய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, அரக ஞானேந்திராவுக்கு உள்துறை பொறுப்பு வழங்கப்பட்டது. அவருக்கு இத்துறை கிடைக்குமென யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.நற்பண்பு, களங்கமில்லாதவர், ஊழல் இல்லாதவர் என்பதால், முதல்வருக்கு அடுத்த பதவியான, உள்துறை அமைச்சர் பதவி அரக ஞானேந்திராவுக்கு அளிக்கப்பட்டது.ஆனால் அவர் துறையை, சிறப்பாக நிர்வகிப்பதில் தோல்வியடைந்ததாக, சொந்த கட்சியினரே குற்றம்சாட்டுகின்றனர்.மைசூரில் எம்.பி.ஏ., மாணவி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான குற்றம் நடந்த போது, ‘அந்த நேரத்தில் மாணவி, அங்கு எதற்காக செல்ல வேண்டும்…’ என அமைச்சர் அரக ஞானேந்திரா கேள்வியெழுப்பினார். இது தேசிய அளவில், பா.ஜ.,வுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.சமீபத்தில், ‘ஹிஜாப்’ என்ற முஸ்லிம் பெண்கள் முகம், தலையை மூடி அணியும் உடை விவாதத்தின் போது, மாணவர்களுக்கிடையே பெரிய பிரச்னை எழுந்தது. ஆரம்பத்திலேயே இதை கிள்ளி எறிந்திருந்தால், சூழ்நிலை இந்த அளவுக்கு வந்திருக்காது.ஷிவமொகா, தட்சிண கன்னடா, உடுப்பி, தாவணகரே, சிக்கமகளூரு என, மாநிலம் முழுவதும், ஹிஜாப் விவாதம் ஏற்பட்ட போது, அதை கட்டுப்படுத்துவதில் அக்கறை காண்பிக்கவில்லை.ஷிவமொகாவில், பஜ்ரங்தள் தொண்டர் ஹர்ஷா கொல்லப்பட்ட போது, நகரே பற்றி எரிந்தது. 144 பிரிவு அமலில் இருந்த போது, அமைச்சர் ஈஸ்வரப்பா, எம்.பி., ராகவேந்திரா, பா.ஜ., தொண்டர்கள் ஊர்வலம் நடத்தினர். இதை உள்துறை அமைச்சர் தடுக்கவில்லை.ஒவ்வொரு கட்டத்திலும், துறையை சரியாக நிர்வகிக்காததுடன், சர்ச்சைகளை அமைச்சர் ஏற்படுத்துகிறார். எனவே, அவரது துறையை மாற்றும்படி, முதல்வர் பசவராஜ் பொம்மையிடம், ஆர்.எஸ்.எஸ்., அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.எனவே, ஞானேந்திராவிடம் இருந்து அமைச்சர் சுனில்குமாரிடம் உள்துறை ஒப்படைக்கப்படும் வாய்ப்புள்ளது. முதல் முறை அமைச்சரானாலும், மிகவும் முக்கியமான துறையான, மின்சாரத்துறை பொறுப்பை ஏற்று, சிறப்பாக நிர்வகிக்கிறார்.அனுபவம் இல்லையென்றாலும், துறையில் மாற்றங்களை கொண்டு வந்து, பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களின் அன்பை பெற்றுள்ளார்.அவரிடம் உள்துறையை தரும்படி, பா.ஜ.,வினரும் வலியுறுத்துகின்றனர். செயற்குழு கூட்டத்துக்கு பின், ஞானேந்திரா பதவியை இழந்தாலும், ஆச்சர்யம் இல்லை என கட்சியினர் பேசிக் கொள்கின்றனர்.