‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து தனுஷ் மற்றும் செல்வராகவன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
‘மயக்கம் என்ன’ திரைப்படத்திற்குப் பிறகு சுமார் 11 ஆண்டுகள் கழித்து தனுஷ், செல்வராகவன் இணைந்துள்ள படம் ‘நானே வருவேன்’. இந்தப் படத்தில் தனுஷ் வயதானவராகவும், இளைஞராகவும் என இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார். நடிகர் தனுஷ் – இயக்குநர் செல்வராகவன் கூட்டணி, ஏற்கெனவே 3 வெற்றி படங்களை தந்த நிலையில், 4-வது முறையாக நீண்ட வருடங்களுக்குப் பிறகு இருவரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.
இதனால், ‘நானே வருவேன்’ படத்திற்கான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. மேலும் இந்தப் படத்தின் இயக்குநரான செல்வராகவன், முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இந்துஜா ரவிச்சந்திரன், ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம், யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகர் தனுஷ் இயக்குநர் போன்று பின்னால் நிற்க, செல்வராகவன் கை கட்டி நிற்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தை, செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘தனுஷும், நானும்’ என அதற்கு கேப்ஷன் இட்டுள்ளார்.
அண்மையில் ‘நானே வருவேன்’ படத்தின் புதிய போஸ்டரை செல்வராகவன் வெளியிட்டு வைரலான நிலையில், படப்பிடிப்பு தளத்திலிருந்து இந்தப் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். இதற்கிடையில், இந்தப் படத்தில் நடிகர் பிரபு இணைந்துள்ளார். தனுஷ் நடித்த ‘3’ படத்திற்குப் பிறகு நடிகர் பிரபு, அவருடன் 2-வது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.