சென்னை:
தமிழ்நாட்டில் சமீபத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டது. இதனை கண்டித்தும், வரி உயர்வை திரும்ப பெறக்கோரியும் தமிழக பா.ஜனதா சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை சென்னையில் கலெக்டர் அலுவலகம் அருகே பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார்.
எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி மற்றும் மாநில துணை தலைவர்கள் வி.பி. துரைசாமி, சக்கரவர்த்தி, முன்னாள் பொறுப்பு மேயர் கராத்தே தியாகராஜன், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் செந்தில்குமார், மாநில இளைஞரணி பொருளாளர் ஜி.கே.எஸ் என்கிற ஜி.கே.சுரேஷ், பொதுச்செயலாளர் தங்க மனோகரன் மற்றும் மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பா.ஜனதாவினர் சொத்து வரி உயர்வை திரும்ப பெற கோரி எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி இருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும் கோஷம் எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-
சொத்துவரி உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். 150 சதவீத உயர்வு என்பது சாதாரண விஷயமல்ல. இந்த கொரோனா காலகட்டத்தில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து பாதிப்பு அடைந்துள்ளனர். அதில் இருந்து மீண்டு வரும் நேரத்தில் இந்த சொத்துவரி உயர்வு தேவையில்லாத ஒன்று.
நான் உள்பட எங்கள் பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் குரல் எழுப்பி சொத்துவரி உயர்வை திரும்ப பெற கோரி வெளிநடப்பு செய்தோம். அ.தி.மு.க. உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். ஆனால் வரி உயர்வை திரும்ப பெற தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மக்கள் அரசு என்று சொல்லிக்கொண்டு மக்கள் பிரச்சினைகளை தீர்க்காத அரசாக உள்ளது. பா.ஜனதா தமிழக மக்களின் ஒவ்வொரு பிரச்சினைக்கு கொடி பிடித்து போராடி வருகிறோம். தமிழக முதல்வர் மக்கள் நலன் கருதி சொத்து வரி உயர்வை உடனே வாபஸ்பெற வேண்டும்.
மத்திய அரசின் வழிகாட்டுதல்படி தான் மாநில அரசு சொத்துவரியை உயர்த்தி உள்ளதாக தவறான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். இது உண்மைக்கு மாறானது.
மத்திய அரசு மற்ற மாநிலங்களைவிட தமிழகத்துக்கு 24 சதவீதம் அதிகமாக நிதியை வழங்கியுள்ளது.