போபால்: மத்தியப்பிரதேசத்தில் நிருபரை காவல்நிலையத்தில் அரை நிர்வாணப்படுத்தியது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ-வாக இருக்கும் கேதர்நாத் சுக்லா மற்றும் அவரது மகன் குரு தத் குறித்து நாடக நடிகர் நீரஜ் குந்தர் அவதூறு கருத்துகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரில் நீரஜ் குந்தர் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து சித்தி மாவட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான சமூக ஆர்வலர்கள், யூடியூபர்கள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு விரைந்த போலீசார் செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர், கேமரா மேன், நாடக நடிகர்கள் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது, போலீசார் அவர்களை அரைநிர்வாணப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு டுவிட்டரில் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, மத்தியப்பிரதேச பாஜக அரசை சாடியதுடன், ஜனநாயகத்தின் நான்காம் தூண் லாக்கப்பில் தகர்க்கப்படுவதாகவும், பாஜக அரசு உண்மையை கண்டு பயப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அரசின் புகழ் பாடுங்கள்; அல்லது சிறைக்குச் செல்லுங்கள் என்பதைத் தான் இந்திய அரசு கூறுகிறது என்றும் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.