“பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது!" – ஸ்டாலின் காட்டம்

நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டம் நேற்று நடைபெற்றது. அதற்கு தலைமை வகித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்லாமல், ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது.

வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநிலங்களில் உள்ள மக்கள் , ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, ​​அது `இந்திய மொழியில்’ இருக்க வேண்டும். இந்தி மொழியின் முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அமைச்சரவையின் 70 சதவிகித நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது” என்றார்.

அமித் ஷா

பா.ஜ.க அரசு இந்தி மொழியை மக்களின் மீது திணித்து வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில், அமித் ஷாவின் இந்த பேச்சு பலதரப்பு அரசியல் தலைவர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அமித் ஷாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், “`ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்! இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பா.ஜ.க தலைமை தொடர்ந்து செய்கிறது.

முதல்வர் ஸ்டாலின்

‘இந்தி மாநிலம்’ போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித் ஷா நினைக்கிறாரா? ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது! ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது! ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால், அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்!” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.