டாணாக்காரன் விமர்சனம்: இது சொல்லப்பட வேண்டிய `போலீஸ்' கதை – அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் நிஜ சினிமா!

90களின் இறுதியில் காவல்துறை பயிற்சிக்குச் செல்லும் இளைஞர்களுடன் 80களில் இருந்து ஒரு குழுவும் பயிற்சிக்கு வருகிறது. வெவ்வேறு ஸ்குவாட்களாகப் பயிற்சிக்கு வந்தவர்கள் பிரிக்கப்பட, அறிவு இருக்கும் ஸ்குவாட் எப்போதும் கடுமையாக நடந்துகொள்ளும் காவல்துறை அதிகாரி ஈஸ்வரமூர்த்தியின் கீழ் வருகிறது. மிகவும் கண்டிப்பான அவருக்கு தன் குழுவில் இருக்கும் வயதானவர்களையும் பிடிக்கவில்லை, அவர்களுக்கு ஆதரவாக அறத்தின் பக்கம் நிற்கும் அறிவையும் பிடிக்கவில்லை. சின்ன சின்ன பிரச்னைகளும் ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன. மரணங்கள் சம்பவிக்கின்றன. வருங்கால காவல்துறை அதிகாரிகள் எப்படி இவர்களிடம் தப்பிப் பிழைக்கிறார்கள் என்பதாக நீள்கிறது ‘டாணாக்காரன்’.

டாணாக்காரன்

அறிவாக விக்ரம் பிரபு. எழும் கோபத்தை அடக்கிக்கொண்டு திமிறி எழாமல் அமைதியாகk காரியத்தை முடிக்க வேண்டிய கதாபாத்திரம். ‘கும்கி’ படத்துக்குப் பின்னர் விக்ரம் பிரபுவுக்கு நல்லதொரு வேடம். அதைச் சிறப்பாக செய்திருக்கிறார். ஈஸ்வர மூரத்தியாக லத்தியுடன் பரேடு கிளப்பும் அதிகாரியாக லால். அந்த மனிதருக்கு பெரும் தீனி போட்டிருக்கிறது ஈஸ்வரமூர்த்தி கதாப்பாத்திரம். அவர் கையிலிருந்து விழும் ஒவ்வொரு அடியிலும் காக்கியின் ஆக்ரோஷம் வெளிப்படுகிறது. காவல் நிலையங்களில் நாம் பார்த்துப் பழகிய கரை படிந்த காக்கிகளை நினைவுக்குக் கொண்டுவருகிறார் முத்து பாண்டியாக வரும் மதுசூதனராவ்.

ஆண்கள் சூழ் காவல்கூடாரத்துக்குள் அரும்பு குறும்பு ஏஞ்சலாக அஞ்சலி நாயர். காவல்துறை அதிகாரியாக இருந்துகொண்டு, பயிற்சிக்கு வந்திருக்கும் விக்ரம் பிரபுவைக் காதலிக்கும் அஞ்சலியின் பாத்திரத்தில் சற்று சினிமாத்தனம் இருந்தாலும், யதார்த்ததில் இப்படியான நிகழ்வுகளும் நடப்பதால் அதை எளிதாகக் கடக்க முடிகிறது. என்ன, அந்தக் காதல் பாட்டுதான் தனித்து நிற்கிறது.

குறைவான காட்சிகளே வந்தாலும் நேர்மையான காவல்துறை அதிகாரியாக போஸ் வெங்கட்டும், எல்லாவற்றையும் இழந்தும் நேர்மையாக இருக்கும் கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கரும் பளிச்சிடுகிறார்கள். எண்பதுகள் குழுவில் தன் அழுகையின் மூலம் சித்தப்புவாக வரும் பிரகதீஸ்வரன் நம்மையும் கண்ணீர் சிந்த வைத்துவிடுகிறார்.

டாணாக்காரன்

தன் காவல்துறை அனுபவங்களை வைத்து அங்கு நடக்கும் அழுக்குகளைத் துணிந்து திரைக்கதையாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தமிழ். காவல்துறை அதிகாரிகள் ஏன் இவ்வளவு மூர்க்கமாகவும், சாமானியர்களை ஏளனமாகவும் பார்க்கிறார்கள் என்பதற்கு பின்னிருக்கும் உளவியல் குறித்து நன்கு ஆராய்ந்து இந்தப் படைப்பினை எழுதியிருக்கிறார். வாழ்த்துகள் தமிழ்.

இனி தமிழ் சினிமாவுக்கு காவல் துறை அதிகாரி கதாபாத்திரங்கள் வேண்டுமென்றால் இந்த ‘டாணாக்காரன்’ குழுவிலிருந்தே நடிகர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம் என்னும் அளவுக்கு எல்லோரிடமும் ஈஸ்வரமூர்த்தியாய் வேலை வாங்கியிருக்கிறார் தமிழ்.

படத்தின் 95 சதவிகித காட்சிகள் அந்தக் காவல் கூடாரத்தை தாண்டவில்லை. ஆனால், அதில் சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக்கொள்கிறது மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவும், பிளோமின் ராஜின் படத்தொகுப்பும். தமிழ் சினிமாவின் புதிய கதையொன்றுக்கு, வழக்கம் போல வித்தியாசமான பின்னணி இசை தந்து ஈர்க்கிறார் ஜிப்ரான்.

டாணாக்காரன்

முதல் பாதியில் சரசரவென செல்லும் கதை, இரண்டாம் பாதியின் இறுதியில் கமர்ஷியல் சினிமா என்னும் வளையத்துக்குள் சிக்கி ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமா பட பாணிக்கு மாறிவிடுகிறது. அதே போல், கண்டிப்பான அப்பழுக்கற்ற ஈஸ்வரமூர்த்தியின் கதாபாத்திரத்தை ஏனோ, வழக்கமான கரை படிந்த கதாபாத்திரமாக மாற்றிவிடுகின்றன படத்தின் இறுதிக் காட்சிகள். இப்படியாக சின்ன சின்ன குறைகள் மட்டுமே.

காவல்துறை அதிகாரத்தின் மூர்க்கத்துக்குப் பின்னான காரணங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியதில் ராயல் சல்யூட் பெறுகிறான் இந்த ‘டாணாக்காரன்’.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.