இது… போக்சோ சீஸன் எனும் அளவுக்கு, தொடர்ந்து பள்ளிக்கூட ஆசிரியர்கள் மீது பாலியல் வழக்குகள் பாய்ந்தவண்ணம் இருக்கின்றன. தமிழகம் முழுக்கவே வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டவர்களாக தினம் தினம் துடித்தபடி இருக்கின்றனர் மாணவிகளைப் பள்ளிக்கு அனுப்பிவைக்கும் பெற்றோர்.
இதற்கு நடுவே, `பணத்தைச் சுருட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக, நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதைத் திசைதிருப்புவதற்காக அந்தப் பள்ளியின் கணித ஆசிரியர் மீதே பொய்யாக போக்சோ சட்டப்படி வழக்கு பாய்ச்சப்பட்டுள்ளது’ என்கிற பகீர் புகார் கிளம்பியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இதன் கணித ஆசிரியரான ஆரோக்கிய அருள் தோமஸ், பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என்று சொல்லி, கடந்த சில தினங்களுக்கு முன்பு போக்சோ சட்டப்படி வழக்கு பதிவானது. இது தொடர்பாக விகடன் இணையதளத்திலும் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில்தான், `பள்ளி நிர்வாகத்தின் மீது ஏகப்பட்டு குற்றச்சாட்டுகள் உள்ளன. நிதிமுறைகேடுகளும் நடந்துள்ளன. இதையெல்லாம் தொடர்ந்து விமர்சித்து வந்த காரணத்தாலேயே ஆரோக்கிய அருள்தோமஸ் திட்டமிட்டு போக்சோ வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளார். இதற்கு, பரமக்குடி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸும் உடந்தை’ என்று இந்த விவகாரம் பூமராங் ஆகத்தொடங்கியுள்ளது. அத்துடன், சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு முன்ஜாமீனும் வழங்கியுள்ளது, மதுரை உயர் நீதிமன்றக் கிளை.
முன்னதாக, சம்பந்தப்பட்ட மாணவி, குழந்தைகள் நல அமைப்பில் புகார் அளித்ததன் பேரில், விசாரணை மேற்கொண்ட அந்த அமைப்பினரே கணித ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க, அதனடிப்படையில்தான் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே அவர் தலைமறைவாகி விட்டார் என்று அதே போலீஸ் தரப்பிலிருந்து செய்திகள் கசியவிடப்பட்டன. இதையெல்லாம் வைத்து, இந்தப் பிரச்னையில் பெரிதாக பணம் விளையாடுகிறது என்று பரமக்குடியில் பரபரப்புக் கிளம்பிவிட்டது.
இதுதொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கினோம். ராமநாதபுரம் குழந்தைகள் நல அலுவலர் சத்யேந்திரனிடம் கேட்டபோது, “பிளஸ்-2 படிக்கும் மாணவி, எங்களைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். போலீஸாருடன் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினோம். தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொன்னார்கள். அவர்களின் பதிலில் நிறைய முரண்பாடுகள் இருந்தன. மாணவியிடம் ரகசியமாக விசாரித்தபோது, பாலியல் தொல்லை என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பிற மாணவிகளிடமும் விசாரணை நடத்தினோம். அதன் பிறகு, மாணவி சார்பில் புகார் அளித்தோம். வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த ஆசிரியர் தலைமறைவாகி இருப்பதாகவும்… விரைவாக பிடித்து விடுவதாகவும் போலீஸார் சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் சிங்கராயரிடம் கேட்டதற்கு, “புகார் வந்ததும் அந்த ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து, அறிக்கையை பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்துக்கும் அனுப்பிவிட்டோம். வழக்கு விசாரணையில் இருப்பதால், இதற்கு மேல் எதையும் பேசுவது சரியாக இருக்காது” என்று சொல்லி முடித்துக் கொண்டார்.
பள்ளியின் ஆசிரியர்கள் சிலரிடம் பேசியபோது, “அவர், சிறந்த ஆசிரியருக்கான விருது பெற்றவர். மாணவ, மாணவிகள் மீது அதிக அன்பு கொண்டவர். அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சொல்வதை நம்பவே முடியவில்லை. பள்ளி நிர்வாகத்துக்கும் அவருக்கும் சில பிரச்னைகள் இருந்தன. பள்ளியில் எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. அதிக கட்டணம் வசூலித்தபோதிலும், அடிப்படைத் தேவையான கழிவறை வசதிகூட சரிவர செய்து கொடுக்கப்படவில்லை. இதையெல்லாம் அந்த ஆசிரியர் வெளிப்படையாகப் பேசி ஆதங்கப்படுவார். இது, பள்ளி நிர்வாகத்துக்குப் பிடிக்கவில்லை. அவருக்கும் தலைமை ஆசிரியருக்கும் இடையே அடிக்கடி மனஸ்தாபங்கள் ஏற்பட்டன. எப்படியாவது அவரைப் பள்ளியை விட்டு அனுப்பிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் பொய்யான புகாரில் சிக்க வைத்து விட்டார்கள்” என்றவர்கள், அன்றைய தினம் நடந்த விஷயத்தை நம்மிடம் விவரித்தார்கள்.
“அன்று தேர்வு நடந்து கொண்டிருந்தபோது, வகுப்பறையில் அந்த மாணவி, தன்னுடைய படத்தைக் கையில் வைத்துக் கொண்டு பேனாவால் குத்தியபடி இருந்துள்ளார். `என்னம்மா ஏன் இப்படி செய்கிறாய்?’ என்று ஆசிரியர் ஆரோக்கிய அருள் தோமஸ் கேட்டுள்ளார். அதற்கு, ‘என்னை எனக்கே பிடிக்கவில்லை’ என்று அந்த மாணவி சொல்லியுள்ளார். உடனே, ‘உன்னை, இங்க இருக்கிற எல்லாருக்கும் பிடிக்கும். எனக்கும் பிடிக்கும். இப்படியெல்லாம் பேசக்கூடாது’ என்று தலையில் செல்லமாகத் தட்டியுள்ளார். இதுதான் நடந்திருக்கிறது. ஆனால், இதையே பாலியல் புகாராக மாற்றியுள்ளனர்.
இது எல்லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவே தோன்றுகிறது. அதாவது, போலீஸ் உட்பட அதிகாரிகளிடம் முன்கூட்டியே பேசிவிட்டனர். அதன்படி மாணவியை முன்கூட்டியே தயார் செய்து, வேண்டுமென்றே புகார் கொடுத்துள்ளனர். அதிலும் மாணவிகள் மட்டுமே இருக்கும் அந்த வகுப்புக்கு இவரைத் திட்டமிட்டே அனுப்பியுள்ளனர். அவர்கள் எதிர்பார்த்தபடியே நடக்க, சில மாணவிகளைச் சாட்சியாக வைத்து புகார் கொடுக்க வைத்துள்ளனர். சாட்சியாக இவர்கள் சேர்த்த மாணவிகளில் ஒருவர், பிறகு அதை வாபஸ் வாங்கிவிட்டார். அதாவது, அவருடைய பெற்றோருக்கு விஷயம் தெரிந்து விசாரித்தபோது அந்த மாணவி எல்லா உண்மைகளையும் கூறிவிட்டார். இதைத்தொடர்ந்து, எங்களைக் கேட்காமல் எப்படி எங்கள் மகளைச் சாட்சியாக சேர்த்தீர்கள் என்று பள்ளி நிர்வாகத்திடமும், போலீஸிடமும் எதிர்ப்பு தெரிவித்த அந்தப் பெற்றோர், சாட்சியாகச் சேர்க்கப்பட்ட விவரங்களை வாபஸ் பெறவைத்துவிட்டனர்.
இந்தப் பள்ளியை பொறுத்தவரையிலும் யாரையும் பணம் கொடுத்துச் சரிக்கட்டி விடுவார்கள். அதிலும் போலீஸாருக்கு பெரும்பணம் கைமாறியிருப்பதாகவே தோன்றுகிறது. அதனால்தான் அந்த ஆசிரியர் போலீஸை நம்பி விசாரணைக்குச் செல்லாமல், நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். தன் மீது தவறு இல்லை என்று நீதிமன்றத்தில் நிரூபித்து மீண்டும் பணிக்கு வருவார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்று சொன்னார்கள்.
அந்த ஆசிரியர்களில் ஒருவராக அனைத்தையும் காதில் வாங்கியபடி இருந்த ஒர் ஆசிரியர், தனியாக நம்மிடம் வந்து, “ஏற்கெனவே இதுபோன்று அந்த ஆரோக்கிய அருள் தோமஸ் மீது மீது புகார் வந்துள்ளது. தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அதனால்தான் குழந்தைகள் நல அமைப்பில் புகார் செய்துள்ளார் அந்த மாணவி. நல்லவராக இருந்தால் அந்த ஆசிரியர் ஏன் ஓடிஒளிய வேண்டும். முன்ஜாமீன் கேட்டு ஏன் கோர்ட்டுக்கு போகவேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையே, மதுரைச் சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலரான ஆனந்தராஜ், இந்தப் பள்ளிக்கூடத்தில் முறைகேடுகள் நடப்பதாக தனக்குக் கிடைத்த புகார்களின் அடிப்படையில், பெற்றோர், ஆசிரியர் கழகப் பதிவேடு மற்றும் பள்ளியின் வரவு – செலவு கணக்குகளை ஆய்வு செய்ய அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். “என் வரைக்கும் பள்ளிவிவகாரம் சென்றதற்குக் காரணமே அந்த ஆசிரியர்தான் என்று சந்தேகித்தே, இப்படி பொய்யாக போக்சோ வழக்கு பாய்ச்சப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்” என்று ஆனந்தராஜ் குற்றம்சாட்டுகிறார்.
“தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அடிப்படை வசதிகளான கழிவறை, பெண் பிள்ளைகளுக்கான நாப்கின் வசதிகள் அனைத்தும் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளேன். இந்தப் பள்ளி பற்றிய புகார்கள் எனக்கு வந்ததால், மனுதாரர் என்ற முறையில் பள்ளி வரவு செலவு கணக்குகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதற்காக பரமக்குடி முதன்மை கல்வி அலுவலரிடம் அனுமதி கேட்டிருந்தேன்.
இதைத் தொடர்ந்து, பள்ளியின் தாளாளர் சிங்கராயர், சில ஆசிரியர்கள் மற்றும் போலீஸாருடன் மதுரையில் இருக்கும் என் வீட்டுக்கே வந்து என்னை மிரட்டினார்கள். இதுதொடர்பாகவும், மார்ச் 5 -ம் தேதி பள்ளியின் தாளாளர் சிங்கராயர், ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளேன்.
ஆக, பள்ளியில் நடக்கும் முறைகேடுகளை மூடிமறைக்கவும், இதுதொடர்பான நீதிமன்ற வழக்கு விஷயத்தை வெளியில் தெரியாமல் மறைக்கவுமே கணித ஆசிரியர் மீது பாலியல் புகாரைத் தெரிவித்துள்ளார்களோ என்று சந்தேகிக்கிறேன். அந்த ஆசிரியர் குற்றவாளியா, இல்லையா என்பதை நீதிமன்றம்தான் உறுதிப்படுத்த வேண்டும்” என்று சொன்னார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்துவிடம் இந்த விஷயம் தொடர்பாக பேசியபோது, ”பாலியல் புகார் எழுந்ததைத் தொடர்ந்தே அந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீஸ் விசாரணை நடக்கிறது.
அதேநேரத்தில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகப் பதிவேடு மற்றும் பள்ளி வரவு செலவு கணக்குப் பதிவுகளை ஆய்வு செய்துகொள்ளலாம் என பள்ளி நிர்வாகம் சார்பாக ஆனந்தராஜுக்கு ஏற்கெனவே அழைப்பு விடுத்துள்ளனர். அதனால் அவர் ஆய்வு மேற்கொள்ள எந்தத் தடையும் கிடையாது” என்றார்.
ஆசிரியர் ஆரோக்கிய அருள் தோமஸ், மகளிர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்குப் பிறகே போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றுதான் முதலின் கூறப்பட்டது. அப்படியிருக்க, பிறகு அவர் தலைமறைவாகிவிட்டார் என்று அதே போலீஸ் சொல்வதுதான் பலவிதமான சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள். கல்வி நிறுவனத்தினரும், போலீஸாரும் சேர்ந்து இந்த போக்சோ வழக்கையே மூடி மறைக்க முயல்கிறார்கள். இதற்காகப் பல லட்சங்கள் கைமாறி உள்ளன என்றொரு குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.
”பள்ளியில் உண்மையிலேயே என்ன நடந்தது என்பதைப் பள்ளி நிர்வாகமும் காவல்துறையும் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். ஆசிரியர் தவறு செய்தார் என்றால், கட்டாயம் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேசமயம், பள்ளி நிர்வாகம் தன்னுடைய தவறை மூடி மறைப்பதற்காக இப்படி பிரச்னையைக் கிளப்பிவிட்டிருக்கிறது என்றால், பள்ளி நிர்வாகத்தின் மீதான நடவடிக்கை மிகமிகக் கடுமையாக இருக்கவேண்டும். இது தொடர்பாக போலீஸ் அல்லாத ஒரு குழுவை நியமித்து உண்மையைக் கண்டறியவேண்டும்” என்று கவலை பொங்கச் சொல்கிறார்கள், மாணவிகளின் பெற்றோர் பலரும்.
இந்நிலையில், இன்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை, இந்த வழக்கில் போதுமான முகாந்திரம் இல்லை என்று கூறி, ஆசிரியர் ஆரோக்கிய அருள் தோமஸுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. போலீஸ் தரப்பில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை தப்பும் தவறுமாக இருப்பதாகவும், வேண்டுமென்றே வழக்குப் பதிந்ததால் அவசரக்கோலத்தில் அள்ளித் தெளித்தக் கதையாக சொதப்பி, தற்போது போலீஸாரும் இதில் சிக்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அனைத்தையும் பார்க்கும்போது, இந்த விவகாரத்தில் ஏதோ நடக்கிறது என்று தெளிவாகவே தெரிகிறது. சம்பந்தப்பட்ட பள்ளி, போலீஸ் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும். இந்த விசாரணை நேர்மையாக நடத்தப்பட்டு யார் தவறு செய்திருந்தாலும் உரிய தண்டனையைத் தர தமிழக அரசு முன்வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.