தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், குறிப்பாக கிராமப்புற பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில், தைவானைச் சேர்ந்த உலகின் முன்னணி ஷூ தயாரிப்பு நிறுவனமான ஹாங் ஃபூ தொழிற் குழுமம், நைக், பூமா போன்ற உலக அளவில் பிரபலமான பிராண்டு ஸ்போர்ட்ஸ் ஷூக்களை தயாரிக்க தமிழகத்தில் அடுத்த 3-5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த தைவான் ஷூ தயாரிப்பு நிறுவனம் முதலீடு செய்து உற்பத்தி அலகுகளைத் தொடங்கினால், சுமார் 20,000 பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள். அதில் குறிப்பாக பெண்கள் அதிகப்படியாக வேலை வாய்ப்பை பெறுவார்கள்.
2003-ல் தொடங்கப்பட்ட ஹாங் ஃபூ தொழிற் குழுமம், நைக், பூமா, கன்வர்ஸ், வேன்ஸ், கோல் ஹான் மற்றும் ஹோகா உள்ளிட்ட முன்னணி உலக அளவில் பிரபலமான பிராண்டு ஸ்போர்ட்ஸ் ஷூக்களை தயாரித்து வருகிறது.
ஹாங் ஃபூ தொழிற் குழுமத் தலைவர் டி ஒய் சாங், முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநிலத் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மாநில அரசின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் தமிழக அரசுடன் வியாழக்கிழமை மாலை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் ஷூ தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவ பொருத்தமான இடத்தைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஹாங் ஃபூ நிறுவனம் உலகின் 2-வது மிகப் பெரிய ஸ்போர்ட்ஸ் ஷூக்களையும் பிற காலணிகளை உற்பத்தி செய்யும் பெரிய நிறுவனமாகும். வியட்நாமில் உள்ள பல தொழிற்சாலை அலகுகள் மூலம், இந்நிறுவனம் இப்போது இந்தியாவிற்கு வந்து தமிழ்நாட்டில் உற்பத்தி அலகுகளை அமைக்கிறது. முதலீட்டு முன்மொழிவை, இந்தியாவில் இருந்து தோல் காலணி ஏற்றுமதியில் முன்னணி நிறுவனமான புளோரன்ஸ் ஷூ நிறுவனத்தின் தலைவர் அக்யூல் பனருனா அறிவித்துள்ளார்” என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உற்பத்தி அலகுகளை அமைப்பதற்காக ஹாங் ஃபூ தொழிற் குழுமத்தின் குழுவினர், ஏற்கனவே வட தமிழகத்தில் 4 இடங்களை பார்வையிட்டுள்ளது. இப்போது திருச்சியில் இருந்து தூத்துக்குடி வரை நான்கு இடங்களை ஆய்வு செய்ய உள்ளது. ஞாயிற்றுக்கிழமைக்குள், இந்த குழு தேவையான இடத்தை தேர்வு செய்யும்” என்று தோல் தொழிற் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
ஹாங் ஃபூ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “ஹாங் ஃபூ நிறுவனத்தின் முதலீடு மூலம் தமிழ்நாடு உலக அளவில் தோல் பொருள் பயன்படுத்தாத காலணி உற்பத்தியின் மையமாக உருவெடுக்க பெரிய ஊக்கமாக இருக்கும். இந்த துறை மூலம் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில், குறிப்பாக பெண்களுக்கு, பெரிய வேலைவாய்ப்பை உருவாகும். இந்த நிறுவனத்தின் குழுக்கள் ஏற்கனவே சில இடங்களுக்குச் சென்று பார்வையிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மேலும் சில இடங்களை பார்வையிடுகிறார்கள். துறைமுகம் அருகில் இருப்பது மற்றும் தொழிலாளர்கள் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“