புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாகவே ஏறக்குறைய ஆயிரம் என்ற அளவிலே உள்ளது. தொற்று பரவல் குறைந்து வருவதால், பல மாநிலங்களில் முகக்கவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், 5 மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், கேரளா, மிசோரம், மராட்டியம், டெல்லி மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில், கொரோனா வழிகாட்டுதல்களை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில், கடந்த வாரத்தில் 2,321 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த வாரத்தில் பதிவான மொத்த பாதிப்பில் இது 31.8 சதவீதம் ஆகும். அதேபோல், இந்தியாவில் வாராந்திர பாதிப்பு விகிதம் 13.45 சதவிகிதத்தில் இருந்து 15.53 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.