புதுடெல்லி: தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் செயல்படும் வரை, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புத் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் மறுசீரமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவே முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு – கேரளா இடையே நீண்ட காலமாக நிலவி வரும் முல்லைப் பெரியாறு அணையின் கண்காணிப்புக் குழு தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு வழங்கிய உத்தரவில், “அணைகள் பாதுகாப்புச் சட்டம் 2021-ன் பிரிவு 9ன் படி, வழக்கமான தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் (என்டிஎஸ்ஏ) செயல்படும் வரை முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புத் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் மறுசீரமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவே முடிவு செய்ய வேண்டும்.
இந்தக் கண்காணிப்புக் குழு தனது செயல்பாடுகளை திறம்படச் செய்வதற்கும், அதன் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கும், அனைத்து உதவிகளையும் மத்திய அரசின் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் செய்ய வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து விவகாரங்களையும் மறுசீரமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழு முடிவு செய்து மீண்டும் பாதுகாப்பு மறு ஆய்வு நடத்தும் என்பதைக் குறிப்பிடத் தேவையில்லை. கண்காணிப்புக் குழு வழங்கும் வழிகாட்டுதல்களை நிறைவேற்றும்போது ஏதும் சிக்கல் ஏற்பட்டால், கண்காணிப்புக் குழு வழங்கிய வழிகாட்டுதல்கள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும்.
இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு மற்றும் அதன் பாதுகாப்பு நோக்கத்திற்காக கண்காணிப்புக் குழு அவ்வப்போது வழங்கும் வழிகாட்டுதல்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட மாநிலங்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால், இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறியதற்காக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அவை அனைத்தும் 2021 சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்” என்று உத்தரவிட்டது.