பிரதம மந்திரியின் கதி சக்தி திட்டத்தின் கீழ் சேலம்-சென்னை இடையிலான பயணத்தை குறைக்கும் வகையில், புதிய விரைவு சாலை திட்டம் நிறைவேற்றப்பட இருப்பது குறித்த தகவல்களுக்கு, தமிழகத்தின் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.
குறிப்பாக நாம் தமிழர் கட்சி இதனை கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் சமூக வலைத்தளமான டுவிட்டர் மற்றும் பேஸ்புக் மூலமாக இந்த திட்டத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் இந்த திட்டத்திற்கு எதிராக பொதுமக்களாகிய தங்களின் கருத்துக்களையும் பேசி காணொளிகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த திட்டம் ஏன் வரக்கூடாது என்பது குறித்த கருத்துக்களையும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக இந்த விவகாரத்தில் திமுகவை கடுமையாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் சேலம்-சென்னை எட்டு வழி சாலை திட்டம் நடைமுறைப்படுத்தப் கடுமையாக எதிர்த்த திமுக, நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்த எட்டு வழி சாலை திட்டம் முழுவதுமாக கைவிடப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது.
ஆனால் தற்போது இந்த எட்டு வழி சாலைக்கு எந்தவிதத்திலும் மாற்றம் இல்லாமல், புதிய பெயரில் விரைவு சாலையாக கொண்டுவரப்படும் திட்டத்திற்கு எதிராக திமுக எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை என்று நாம் தமிழர் கட்சியினர் பதிவிட்டு வருகின்றனர்.